×

ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாரீஸுக்கு 90 நிமிடங்களில் பயணம் : அதிவேக ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டத்தை கையில் எடுத்த நெதர்லாந்து

ஆம்ஸ்டர்டாம் : விமானம், புல்லட் ரயிலை விட அதிவேகத்தில் செல்லும் போக்குவரத்துக்காக உலகம் காத்திருக்கிறது. ஹைப்பர்லூப் போக்குவரத்து அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ராட்சதக் குழாய்க்குள் சாலை அமைக்கப்பட்டு மின்மோட்டார்கள் மூலம் காந்தவிசையைக் கொண்டு வாகனங்கள் உந்தித் தள்ளும் போக்குவரத்து முறை இது. 2013-ல் அமெரிக்கரான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனர் எலன் மஸ்க் இத்திட்டத்தை கையில் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் மஸ்க் ஏற்பாடு செய்த சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியில் வெற்றி பெற்ற ஹார்ட் ஹைப்பர்லூப்  நிறுவனம், தற்போது டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஹைப்பர்லூப் பயண முறையை நெதர்லாந்தில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பயண முறையை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வும் மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் ஹைப்பர்லூப் போக்குவரத்து மூலம் நெதர்லாந்து தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாரிஸ், பிரஸ்ஸல்ஸ், டுசெல்டார்ஃப் அல்லது பிராங்பேர்ட் வரையிலான பயண நேரத்தை “மணிநேரத்திலிருந்து குறைக்கக்கூடும்” என்று கண்டறிந்துள்ளது.

ஹைப்பர்லூப் போக்குவரத்து மூலம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாரீஸுக்கு 90 நிமிடங்களிலும், பிரஸ்ஸல்ஸுக்கு 30 நிமிடங்களிலும் சென்றுவிடலாம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதையடுத்து சோதனைக்காக டச்சு மாகாணமான க்ரோனிங்கனில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது, முன்னதாக டெல்ஃப்டில் ஏற்கனவே 30 மீட்டர் சோதனை சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டம் வெகு விரைவில் நெதர்லாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : The Netherlands ,Amsterdam ,Paris , Hyperloop, Transport, Touch, Amsterdam, Travel, Netherlands
× RELATED சென்னை -பாரிஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 5 மணி நேரம் தாமதம்