‘ரெட் அலர்ட்’டில் உள்ள செங்கை மாவட்டத்தில் 20ம் தேதிக்கு பிறகும் 144 அமலில் இருக்கும்: வண்டலூர் டிஎஸ்பி தகவல்

கூடுவாஞ்சேரி: ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 20ம் தேதிக்கு பிறகும், தடை நீடிக்கும் என வண்டலூர் டிஎஸ்பி தெரிவித்தார். வண்டலூர் டிஎஸ்பி அலுவலக வளாகத்தில், போலீசாருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூடுவாஞ்சேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அன்புராஜ் தலைமை தாங்கினார். எஸ்ஐ லோகேஷ்காந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, போலீசார் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். இதேபோல், கரசங்கால் பகுதியில் உள்ள 150 இருளர் குடும்பங்ள், 140 வடமாநில குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளும், 3000 பேருக்கு முக கவசத்தையும் வழங்கினார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. கொரோனா தொற்றை தடுக்கும் விதத்தில் தமிழக அரசும், தமிழக காவல்துறையும் பல முன்னேற்பாடுகளை செய்கின்றன. பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஊரடங்கை மீறி வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்வோம். அதன்படி, வண்டலூர் கோட்டத்தில் மட்டும் இதுவரை 1,500 வழக்குகள் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அனாவசியமாக பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து வந்து, மாவட்டத்தில் தங்கி வேலை செய்த 1,830 பேருக்கு, தேவையான வசதிகளை அரசு வழங்குகிறது. கடந்த 25ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழக்கு பதிந்து, பறிமுதல் செய்த வாகனங்களை தற்போது ஒப்படைத்து வருகிறோம். 20ம் தேதி முதல் சிறு, குறு தொழில் செய்யும் கடைகள், தொழிற்சாலைகள் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தாலும், ரெட் அலர்ட் உள்ள மாவட்டங்களுக்கு பொருந்தாது. ரெட் அலர்ட் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏற்கனவே இருந்த 144 தடை உத்தரவு தொடரும். அதற்கான, அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றார்.

Related Stories:

More
>