×

குமாரசாமி மகன் திருமணத்தில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனாவால் 353 பேர் பாதித்துள்ளனர். 13 பேர் இறந்துள்ளனர். இதனால், ஊரடங்கு உத்தரவு மிக கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், நடிகருமான நிகில் கவுடாவுக்கும்,  முன்னாள் அமைச்சரின் பேத்தியான ரேவதி என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. ராம்நகரில் உள்ள  பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, திருமண நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், நிகிலின் திருமணத்தில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை, முகக்கவசம் அணியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

40க்கும் மேற்பட்ட கார்களில் உறவினர்கள், விஐபி.க்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த இதை மறுத்துள்ள குமாரசாமி, ‘கொரோனா ஊரடங்கை பின்பற்றி,  எனது மகன் திருமணம் மிக எளிமையாக நடந்தது. புதுமண தம்பதிகளுக்கு முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர் தொலைபேசியில் மட்டுமே வாழ்த்து தெரிவித்தனர்,’ என்று கூறியுள்ளார்.

‘நடவடிக்கை எடுக்கப்படும்’
குமாரசாமி மீதான குற்றச்சாட்டு குறித்து கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணா அளித்த பேட்டியில், ‘‘தனது மகன் திருமணத்தில் ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்படும் என குமாரசாமி அறிவித்து இருந்தார். அவர் நீண்ட காலமாக பொதுவாழ்வில் உள்ளார். முதல்வராகவும் இருந்துள்ளார். அவர் விதிமுறைகளை பின்பற்றவில்லை என தெரிந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அறிக்கை அளிக்கும் படி ராம்நகரம் மாவட்ட போலீஸ் எஸ்பி.க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,’’ என்றார்.

Tags : Kumaraswamy ,break ,wedding , Kumaraswamy's son, marriage, social gap
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...