×

கொரோனாவால் 4,632 பேர் இறந்ததாக புதிய தகவல்: முழு பூசணிக்காயை மறைத்த சீனாவின் மோசடி அம்பலம்: சர்வதேச நெருக்கடியால் உண்மையை ஒப்புக் கொண்டது

பீஜிங்: கொரோனா வைரசால் ஏற்பட்ட முழு பலி எண்ணிக்கையில் 50 சதவீதத்தை சீனா மூடி மறைத்தது தற்போது அம்பலமாகி உள்ளது. சர்வதேச நெருக்கடிகள் வலுத்ததால் புதிய புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ள சீனா, தனது நாட்டில் கொரோனாவால் 4,632 இறந்ததாக கூறியுள்ளது. இந்த திருத்தம் கடும் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்விவகாரத்தில் சீனா ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு தகவல்களை மறைத்தது.  இறப்பு விஷயத்திலும் சீனா உண்மைத் தகவல்களை மறைப்பதாகவும், சீன அரசு கூறியதை விட அங்கு பல மடங்கு பலி ஏற்பட்டிருக்கும் என்றும் உலக நாடுகள் குற்றம்சாட்டின.

இதனால், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், சீனா முதல் முறையாக  இறப்பு எண்ணிக்கையை மறைத்ததை ஒப்புக் கொண்டுள்ளது. அங்கு வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் 82,367 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 3,342 பேர் இறந்ததாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியிருந்தது. தற்போது வுகான் நகராட்சி நிர்வாகம் நேற்று புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், பலி எண்ணிக்கை திருத்தப்பட்டு உள்ளதாகவும், முன்பு கூறியதை விட 50 சதவீதம் கூடுதல் பலி ஏற்பட்டு இருப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது, வுகானில் கூடுதலாக 1,290 பேர் கொரோனாவால் இறந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதனால், அந்நகரில் பலியானோர் எண்ணிக்கை மட்டுமே 3,869 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த சீனாவின் பலி 4,632 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் எந்த பொய்யையும் சொல்லவில்லை என்றும், வெளிப்படைத்தன்மை இருப்பதை நிரூபிக்கவே புதிய இறப்பு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளதாகவும் வுகான் நகராட்சி கூறியுள்ளது. கொரோனா நோயாளிகள் சிலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வராமல் வீட்டிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும், மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமாக நோயாளிகள் குவிந்ததால், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அரசாணையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஆனாலும், சர்வதேச நெருக்கடி காரணமாகவே வுகான் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கை எடுத்து இருப்பதாக கருதப்படுகிறது. இது, சீனா மீதான நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்கி உள்ளது. அதே சமயம், சீன அரசின் தேசிய சுகாதார ஆணையம், இந்த புள்ளி விவரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,342 மட்டுமே என மீண்டும் அது கூறி வருகிறது.

உலக நாடுகளுடன் இணைந்து விசாரிக்க அமெரிக்கா திட்டம்
கொரோனா வைரஸ் பரவியது பற்றி பொய்யான தகவல் தந்தது, பலி எண்ணிக்கையை மறைத்தது, உலக நாடுகளிடம் இருந்து வைரஸ் பரவல் பற்றிய உண்மை நிலவரத்தை மறைக்க, உலக சுகாதார அமைப்பை தவறாக வழி நடத்தியது போன்ற சீனாவின் தவறுகளைப் பற்றி விசாரிக்க, பல்வேறு நாடுகளை கொண்ட  உயர் மட்ட குழுவை அமைக்க வேண்டுமென அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குழு அதிபர் டிரம்ப்பிடம் நேற்று வலியுறுத்தியது. இந்த சர்வதேச விசாரணையில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய நாடுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததும் சர்வதேச விசாரணையை தொடங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால், சீனா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாக கருதப்படுகிறது.

கடும் பொருளாதார வீழ்ச்சி
கொரோனாவால் சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அடி வாங்கி உள்ளது. உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார வல்லசரான சீனாவில், கொரோனா பரவிய காலத்தில் எந்த தொழிற்சாலையும், கடைகளும், வர்த்தகமும் செயல்படவில்லை. இதனால், நடப்பாண்டின் முதல் 3 மாத காலத்தில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.8 சதவீதம் குறைந்துள்ளது.

சீனா மீது நடவடிக்கை எடுப்பது சுலபம் அல்ல
கொரோனா வைரஸ் பரவிய மர்மம் மற்றும் பலி எண்ணிக்கையில் உண்மையை மறைத்ததாக சீனா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலும் கூட, அதன் மீது சர்வதேச அளவில் நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில், உலகில் உள்ள 5 வல்லரசு நாடுகளில் சீனாவும் ஒன்று. பொருளாதார பலத்தில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்.  வீட்டோ அதிகாரம் படைத்தது. மேலும், மிகப்பெரிய கம்யூனிச நாடு. தன் மீதான எந்த தீர்மானத்தையும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீனாவால் உடைத்து விட முடியும்.

அதற்கு மற்றொரு பலம் வாய்ந்த கம்யூனிச நாடும், பாதுகாப்பு கவுன்சிலின் மற்றொரு நிரந்தர உறுப்பு நாடுமான ரஷ்யாவும் துணை நிற்கும். அதனால், சீனா மீது அமெரிக்காவால் தனிப்பட்ட முறையில் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, மற்ற உலக நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது கடினம் என கூறப்படுகிறது.

‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’
கொரோனா விஷயத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என சீனா நேற்று விளக்கம் அளித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா மிக வேகமாக பரவியதால் பலி எண்ணிக்கையில் சில குழப்பங்கள் நடந்திருக்கலாம். ஆனால், இதில் எதுவும் மூடி மறைப்பதற்கு இல்லை. யாரும் எந்த விஷயத்தை மறைக்கவும் நாங்கள் விட மாட்டோம்,’’ என்றார்.

Tags : deaths ,China ,cheating scandal ,crisis , Corona, China, Fraud, International
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...