கொரோனா, ஊரடங்கால் வீட்டில் முடக்கம் கோலிவுட் நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் உள்பட அனைத்து திரைப்பட பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களும் இயங்கவில்லை. இதனால் அவரவர் வீடு மற்றும் பண்ணை வீட்டில் தங்கி தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் திரை நட்சத்திரங்கள், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது, படங்கள் பார்ப்பது என்றும் பல நடிகைகள் தங்கள் வீட்டை சுத்தப்படுத்துவது, தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவது, தொலைதூர உறவினர்களுடன் வீடியோகாலில் பேசுவது, உடற்பயிற்சி செய்து வீடியோவில் பதிவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது என்றும் நேரம் கழிக்கின்றனர்.

சில நடிகர்கள் தங்கள் காதல் மனைவியரை மகிழ்விக்கும் விதமாக சமையல் செய்து அசத்துவது போன்ற பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் வித்தியாசமாக யோசித்தும் புதிய பயிற்சிகள் மூலம் நேரத்தை கழிக்கின்றனர். இப்படி கோலிவுட் பிரபலங்கள் ஊரடங்கில் என்ன செய்கிறார்கள் என்பது பற்றிய தொகுப்பு இது.  

விஜய் சேதுபதி: தன்னிடம் கதை சொல்ல  முயற்சி செய்த சில இயக்குனர்களிடம், வாட்ஸ்அப் வீடியோகாலில் கதை  கேட்கிறார். மகன், மகளுடன் கேரம் விளையாடுவது, மொட்டை மாடியில் கிரிக்கெட்  விளையாடுவது என பொழுதுபோக்குகிறார்.

விஜய்: கனடாவில் இருக்கும் மகன் ஜேசன்  சஞ்சய்யுடன் வீடியோகாலில் பேசுவதும், சென்னையிலுள்ள வீட்டில் உடற்பயிற்சி  செய்வதுமாக பொழுதுபோக்குகிறார். டேப் மற்றும் வீட்டு ஹோம் தியேட்டரில் படம் பார்ப்பதும் இவரது இப்போதைய தினசரி ஹாபி.

அஜித்: மனைவி ஷாலினிக்கு உதவியாக  சமைப்பது, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனொஷ்காவுக்கு பாடங்கள் சொல்லித்  தருவது, குட்டி விமானங்களை வீட்டில் இயக்குவது போன்ற பணிகளில்  மூழ்கியுள்ளார்.

விவேக்: இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால், அவரது மாஸ்டர்பீஸ் பாடல்களை ஹார்மோனியத்தில் வாசித்து வீடியோ வெளியிடுகிறார். சில டாக்டர்களுக்கு போன் செய்து,அவர்களின் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை சேகரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அனுப்புகிறார்.

தமன்னா: உடற்பயிற்சியில் அதிக நேரம் செலவிடுகிறார். ஜிம்னாஸ்டிக் சேலஞ்ச் வீடியோ வெளியிடுகிறார்.

கீர்த்தி சுரேஷ்: வீட்டை அழகுபடுத்துகிறார். நாயுடன் விளையாடுகிறார். ஆசையாக வளர்க்கும் கிளிக்கு பேச கற்று கொடுக்கிறாராம். சமைக்க கற்றுக்கொள்கிறார்.

காஜல் அகர்வால்: சமையல் செய்கிறார். சமோசா செய்ய கற்று கொண்டாராம். தனது ஆல்பத்தில் உள்ள பழைய படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ரசிகர்களுடன் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார்.

ஸ்ருதிஹாசன்: கீ போர்டு வாசிக்கிறார். சமைக்கிறார். தனியாளாக வீட்டை சுத்தம் செய்கிறார். தந்தை கமல்ஹாசனின் நாயகன் படப் பாடலான தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே என்ற பாடலை புதிய வெர்ஷனில் இசை அமைத்து பாடியுள்ளார். டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார். பியானோ வாசிப்பது தினசரி ஹாபி.

மாதவன்: மும்பை வீட்டின் மொட்டை மாடியிலுள்ள தோட்டத்தை பராமரிக்கிறார். தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்: தனது மகள் ஆராதனாவுக்கு வீடியோ கேம்ஸ் விளையாட கற்றுக் கொடுக்கிறார். சமையலில் மனைவிக்கு உதவியாக இருக்கிறாராம்.

திரிஷா: சமைப்பது, படங்கள்  பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, கொரோனா  விழிப்புணர்வு தொடர்பான வீடியோக்கள் பதிவு செய்வது, தினமும் தனது  பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு காலை, மாலை என இருவேளை  உணவு வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் டிக் டாக்கில்  இணைந்து அதிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஹன்சிகா: புதிதாக தொடங்கியுள்ள தனது யுடியூப் சேனலில், தான் நடிக்கும் திரைப்படங்கள் பற்றியும், தன் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களையும் பேசுகிறார். ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளிக்கிறார்.

தனுஷ், ஐஸ்வர்யா: பவர் பாண்டி 2ம் பாகத்துக்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: