×

கண்ணாடி கதவிற்கு பின்னால் இருக்கும் தந்தை தொட முயற்சிக்கும் மகளின் பாசப்போராட்டம்: கொரோனா காலத்தில் என்னென்னமோ நடக்குது

புதுடெல்லி: கொரோனா பாதிப்புக்கு இடையே, கண்ணாடி கதவிற்கு பின்னால் இருக்கும் தந்தையை தொடுவதற்கு மகள் நடத்தும் பாசப்போராட்டத்தின் வீடியோ காண்போரை கலங்கச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் உலகமே முடங்கியுள்ளது. வைரஸ் பரவுதலை தடுக்க மக்கள் குடும்பத்துடன் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் தங்களது குடும்பங்களைவிட்டு கொரோனாவிற்கு எதிராக நேரடியாக போர் செய்து வருகின்றனர். இதற்கிடையே வீடுகளுக்கும் செல்லமுடியாமல், உணவும் இன்றி லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையோரம் அல்லல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கொரோனாவால் பலரின் வாழ்க்கை மாறியுள்ள நிலையில், ஒரு மருத்துவருக்கும் அவரது மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில், கண்ணாடி கதவிற்கு பின்னே மருத்துவர் ஒருவர் முகக்கவசம் அணிந்துகொண்டு நிற்கிறார். மருத்துவரை கண்டதும் அவரது பெண் குழந்தை ஆர்வத்துடன் கட்டியணைக்க ஓடி வருகிறது. ஆனால் கண்ணாடி கதவு அவர்களை தடுக்கிறது. அந்தக் குழந்தை கண்ணாடிக்கதவை திறக்க தொடர்ந்து முயற்சிக்கிறது.

ஆனால் கதவை திறக்க முடியவில்லை என்பதால் கலங்கி அழுகிறது குழந்தை. பாச மகள் அழுவதை பார்க்கும் மருத்துவர், அதற்கு ஹாய் சொல்லி காற்றிலேயே முத்தம் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். ஆனாலும் மருத்துவர் கதவை திறக்கவில்லை. இதன்மூலம் அந்த மருத்துவர் சமூக விலகலின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். எந்த நாட்டில் நடந்த சம்பவம் என்பது தெரியவில்லை. இருந்தும், இந்த வீடியோ தங்களை கலங்கச் செய்துள்ளதாக இணையதளவாசிகள் பலரும் பகிர்ந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Tags : Corona , Glass Door, Passport, Corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...