×

144 தடையால் சொந்த ஊர் திரும்ப முடியவில்லை உணவு, இருப்பிடமின்றி தவிக்கும் கூலித்தொழிலாளர்கள்

நெல்லை: கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு  நீடிப்பதால் நெல்லையில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், உணவுக்காகவும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நெல்லை மாநகர பகுதியில் அன்றாட தினக்கூலியாக நெல்லை, தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பல தொழிலாளர்கள் தினமும் காலையில் வருகின்றனர். இங்கு அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேவையான இடங்களுக்கு வேலைக்கு பலர் அழைத்துச் செல்கின்றனர்.குறிப்பாக பாளை. மார்க்கெட் பகுதியில் தினமும் காலை 8 மணிக்கு 50 முதல் 100 பேருக்கு குறையாத தினக்கூலி தொழிலாளர்கள் காத்திருப்பார்கள்.
இவர்களைத் தேடி வரும் ஒப்பந்தக்காரர்கள் வெள்ளை அடிப்பது, வீடு பராமரிப்பது, கட்டிட பணி கூலித் தொழிலாளர் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். மாலையில் பணி முடிந்து அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி விடுவார்கள். பாளை மார்க்கெட் பகுதிக்கு மட்டும் தினமும் கோவில்பட்டி, வீரவநல்லூர், அம்பை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள  சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் தினமும் வந்து தினக்கூலி செய்து அன்றாடம் கிடைக்கும் பணத்துடன் வீடு திரும்பி வந்தனர்.

 இந்நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி நெல்லைக்கு வெளியூர்களிலிருந்து வந்திருந்த பல தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும்  புறநகர் பகுதி தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 45க்கும் மேற்பட்டவர்கள் பாளையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பொது இடங்களில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு தினமும் உணவு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பாளை. ராமசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழங்கப்படும் மதிய அன்னதான உணவை வாங்கி சாப்பிடுகின்றனர். சில நாட்கள் பொதுநல அமைப்பினர் இவர்களுக்கு உணவு கொண்டு வந்து தருகின்றனர். கடந்த 20 நாட்களில் பல நாட்கள் ஒரு வேளை உணவை மட்டுமே தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். தங்குவதற்கும் இடமில்லாததால் ஆங்காங்கே பொது இடங்களில் இரவுப்பொழுதை தங்கி கழிப்பதாக தெரிவித்தனர்.
 போலீசார் கெடுபிடி இருப்பதால் தினமும் ஆற்றிற்கு சென்று குளிப்பதற்கும் சிக்கல் உள்ளது. 144 தடை உத்தரவு நீங்கினால் மட்டுமே தங்களுக்கு மீண்டும் அன்றாட கூலி வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. எங்கள் உறவினர்கள் பலர் சொந்த ஊரில் எங்களைப்போல் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர் என அவர்கள் கூறினர்.

Tags : wage laborers ,shelter ,homeland ,Shelter Wage Laborers , 144 The, barrier ,return home,laborers
× RELATED ஈரோடு மாநகராட்சி தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அமல்