×

கால் எலும்பு முறிந்த பெண்ணை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

திருப்பதி: திருப்பதி அருகே கால் எலும்பு முறிந்த பெண்ணை ஆட்டோக்கள் இல்லாததால் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் திருப்பதி நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ரயில், பேருந்து, ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக காவலர்கள் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி மார்க்கெட் அருகே உள்ள பெத்த காப்பு லே-அவுட் பகுதியில் விஜயா(50) என்பவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நேற்று தனது வீட்டருகே இருந்த மூடப்படாத கால்வாய் பள்ளத்தில் கால் தவறி விழுந்தார். இதனால் அவருடைய கால் எலும்பு முறிந்தது. இதனைபார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் அவரை ஆட்டோவில் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக ஆட்டோக்கள் எதுவும் வரவில்லை.இதனால் அருகில் இருந்த காய்கறி தள்ளுவண்டியில் விஜயாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Tags : hospital , woman,broken leg ,hospita,trolley
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...