×

புளியடி எரிவாயு தகனமேடையில் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களை எரியூட்டுவது எப்படி?: தூய்மை பணியாளர்களுக்கு செயல்முறை விளக்கம்

நாகர்கோவில்:  இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். குமரி மாவட்டத்தில் 16 பேர் கொனோரா வைரசால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.  குமரி மாவட்டத்தில் கொனோரா வைரஸ் தொற்றால் இறப்பவர்களை எப்படி தகனம் செய்வது என மாநகராட்சி சார்பில் செயல்முறை விளக்கம் செய்து பார்க்கப்பட்டது. நாகர்கோவில் புளியடியில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகனமேடையில் இந்த செயல்முறை விளக்கம் நேற்று மாலை நடந்தது.  மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில், மாநகர் நல அதிகாரி டாக்டர் கின்சால், பொறியாளர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, சத்யராஜ், நகர அமைப்பு ஆய்வாளர்கள் கெபின்ஜாய், சந்தோஷ்குமார், இளநிலை உதவியாளர் சாகுல் ஹமீது மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

செயல்முறை விளக்கத்தின்போது ஆம்புலன்சில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர் உடலை கொண்டுவருவதற்கு என கருப்பு நிறம் கொண்ட  கவரில் மாதிரி உடல் எடுத்து வரப்பட்டது. உடல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சார்பில் உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்சில் இருந்த மாதிரி உடல் வைக்கப்பட்ட கருப்பு நிற பேக்கில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உடல் வைக்கப்பட்டு இருந்த கருப்பு நிற பேக்கை எடுத்து உள்ளே சென்று எரிவாயு தகன மேடையில் வைத்து எப்படி எரியூட்டவேண்டும் என அதிகாரிகள் விளக்கினர். பின்னர் தூய்மை பணியாளர்கள் வெளியே வந்தவுடன் அவர்கள் மீது மீண்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. இவ்வாறாக செயல்முறை விளக்கம் நடந்தது.

இது குறித்து ஆணையர் சரவணகுமார் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்றால் இறந்தால், அவர்களது உடலை எப்படி தகனம் செய்வது என தூய்மை பணியாளர்களுக்கு செய்முறை விளக்கமாக சொல்லிகொடுக்கப்பட்டது. இறந்தவரின் உறவினர்கள் 15 பேர் இந்த தகன மையத்தில் அனுமதிக்கப்படுவர். அவர்கள் சமூக இடைவெளியில் நிற்கும் வகையில் மையத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டி அவர்கள் செல்லகூடாது என்றார்

முக கவசம் அணியாவிட்டால் 50 அபராதம்
 மாநகர் நல அதிகாரி டாக்டர் கின்சால் கூறியதாவது: மாநகர பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்க வேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். மாஸ்க் அணியாமல் வந்தால் 50 அபராதம் விதிக்கப்படும். மேலும் வணிக நிறுவனங்கள் பணியில் இருப்பவர்கள் மாஸ்க் அணியாவிட்டால் ₹100ம், பொது இடத்தில் எச்சில் துப்பினால் 50ம் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.


Tags : Incinerate Dead People With Coronavirus Infection ,Puliyadi Gas Crematorium , Incinerate ,Coronavirus ,Puliyadi Gas,
× RELATED பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி...