×

மஞ்சூர் அருகே முள்கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தை: 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

மஞ்சூர்:  மஞ்சூர் அருகே முள் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது மட்டக் கண்டி. இப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தின் நடுவே மேரக்காய் பயிரிடுவதற்காக வலை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தை சுற்றிலும் முள் கம்பியால் ஆன பாதுகாப்பு வேலி போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் உலா வந்த சிறுத்தை, வேலியை தாண்ட முற்பட்டபோது பந்தல் வலையோடு முள்வேலியில் சிக்கியது. இதில் சிறுத்தையின் வாய் பகுதியில் முள்கம்பி குத்தியது. இதனால் சிறுத்தை முள் கம்பியில் இருந்து விடுபட முடியாமல் தவித்தது.
இது குறித்து தகவல் அறிந்த குந்தா ரேஞ்சர் சரவணன் தலைமையில் வனவர்கள் ரவி, ரவிக்குமார் உள்பட 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று முள்கம்பியில் சிக்கிய சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

தொடர்ந்து பாதுகாப்பு கருதி கைகாட்டி வனச்சரக அலுவலகத்தில் இருந்து வலை கொண்டு வரப்பட்டு சிறுத்தையின் மீது போர்த்தி எச்சரிக்கையுடன் சிறுத்தையின் வாயில் சிக்கிய முள்கம்பிகளை கட்டிங்பிளையர் உதவியுடன் வெட்டி அகற்றி சிறுத்தையை மீட்டனர். இந்நிலையில் நீண்ட நேரம் முள்கம்பியில் தொங்கி கொண்டிருந்ததால் சோர்வுடன் காணப்பட்ட சிறுத்தை துவண்டு போய் தரையில் படுத்தது. இதையடுத்து வனத்துறையின் அதன் மீது தண்ணீரை தெளித்தனர்.சுமார் அரை மணி நேரம் படுத்திருந்த உஷாரடைந்த நிலையில் எழுந்து மின்னல் வேகத்தில் அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி மறைந்தது. வேலியில் சிக்கிய சிறுத்தை 2வயதான பெண் சிறுத்தை என்றும், முயலை வேட்டையாட முயன்ற போது முள்வேலியில் சிக்கியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். கம்பியில் சிறுத்தை மாட்டிய சம்பவம் பரவியதால் பொதுமக்கள் பலர் கூடினார்கள், இதையடுத்து மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா, எஸ்.ஐ.ராஜ்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தினார்கள்.

உயிரை பணயம் வைத்த வனத்துறையினர்
முள்கம்பியில் சிறுத்தை சிக்கிய தகவல் அறிந்த மறு நிமிடமே விரைந்து சென்ற வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வெறும் குச்சிகளை கொண்டு சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறுத்தைக்கு எந்த காயமும் ஏற்படாமல் அதை உயிருடன் மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டனர். சிறுத்தை மிகவும் சோர்வடைந்திருந்ததை கண்டு ஒருவர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அதன் வாய்க்குள் செலுத்தினார். கூட்டு முயற்சியுடன் உயிரை பணயம் வைத்து 3 மணி நேரம் போராடி சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Fence ,rescue , Manjur, Life, leopard ,struggle
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...