×

தண்டராம்பட்டு அருகே வவ்வால்களுக்கு கொரோனா பாதிப்பு தகவலால் கிராம மக்கள் அச்சம் : மருத்துவ குழுவினர் தெளிவுப்படுத்த கோரிக்கை

திருவண்ணாமலை:  கொரோனா வைரஸ் பீதியால் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வவ்வால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடத்திய ஆய்வில், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வவ்வால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தில், ஆயிரக்கணக்கான வவ்வால்கள் பல ஆண்டுகளாக அங்குள்ள அரச மரத்தில் வசிக்கின்றன. அந்த கிராம மக்களும் வவ்வால்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். வவ்வால்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பட்டாசுகளை வெடிப்பது அந்த கிராமத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வவ்வால்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் தகவல் வெளியானதால், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் வவ்வால்கள் மூலம்  மனிதர்களுக்கு தொற்று நோய் பரவுவதாக தகவல் வெளியானது.அப்போது, அப்பகுதிக்கு வந்த மருத்துவ குழுவினர் ராயண்டபுரம் கிராமத்திலுள்ள வவ்வால் இனங்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாது என தெரிவித்தனர். அதனால், அப்போது கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்
இந்நிலையில், தற்போது மீண்டும் வவ்வால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் இருப்பதாக வெளியான தகவல் பீதியை கிளப்பி உள்ளது. இதனால், வவ்வால்கள் வசிக்கும் மரத்தின் அருகே செல்ல அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.எனவே, இதுகுறித்து மருத்துவ குழுவினர் தங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பாக மருத்துவ ஆய்வாளர்கள் கிராமத்துக்கு நேரில் வந்து விளக்கினால் தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சமும் பீதியும் நீங்கும் வாய்ப்பு உள்ளது.

Tags : Village residents ,team ,Dandarambattu , Villagers, bats,Dandarambattu,clarify
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...