×

சமூக இடைவெளி விடாமல் கடற்கரையில் திரண்டால்  கடும் நடவடிக்கை: மீனவர்கள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

ராமேஸ்வரம்: பாம்பன் கடற்கரையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூடினாலோ, மீன் விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மீனவர்கள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரித்தனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 13ம் தேதி முதல் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதி மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்புகின்றனர். நேற்று முன்தினம் பாம்பனில் இருந்து நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இரவு முழுவதும் மீன் பிடித்து நேற்று காலை பாம்பன் வடக்கு கடற்கரைக்கு திரும்பினர். பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் பாம்பன் வடக்கு கடற்கரையில் நூற்றுக்கணக்கில் திரண்டனர். இவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மேலும் படகில் மீன்களுடன் திரும்பிய மீனவர்களும் படகில் இருந்து இறங்கி, மீன்களை பிரித்தெடுத்து வலையை உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மேலும் காலை 7 மணிக்குள் மீன்களை விற்றுவிட வேண்டும் என்ற மீன்வளத்துறையின் நிபந்தனையும் மீறப்பட்டு 10 மணி வரை, கடற்கரையில் மீன் விற்பனை நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார் தலைமையில் மீன்வளத்துறை மற்றும் போலீசார் பாம்பன் வடக்கு கடற்கரையில் முகத்தில் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்றிருந்த அனைவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், மீன்வளத்துறையினரால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முறையாக கடைப்பிடிக்காத மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீனவர்களை எச்சரித்தனர். இதனிடையே கடலில் பல நாட்கள் படகில் தங்கி மீன்பிடித்து திரும்பும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர்களால் பிடித்து வரப்படும் மீன்களை வாங்கி செல்ல தூத்துக்குடி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து பாம்பன் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்திட வேண்டும் என சக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் நேற்று தடை உத்தரவை மீறியும், கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மீன்வளத்துறை நிபந்தனையை கடைப்பிடிக்காமலும் மீறி 12 நாட்டுப்படகு உரிமையாளர்கள் செயல்பட்டனர். இதனால் படகில் சென்றமீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாம்பன் போலீஸ் நிலையத்தில், மீன்வளத்துறை சார்பில் ஆய்வாளர் ரமேஸ்பாபு நேற்று புகார் செய்துள்ளார்.



Tags : beach ,fishermen traders ,traders ,Fishermen , Fierce action ,socia,Warning ,fishermen traders
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை