×

ஊரடங்கு உத்தரவால் பாதிப்பு நிவாரணம் கேட்டு இசை முழக்கம்: நாட்டுப்புற கலைஞர்கள் 5 பேர் கைது

பரமக்குடி:  ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் இல்லாமல் இருப்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில், இசை வாத்தியங்களை வாசித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தென்மாவட்டங்களில் நாட்டுப்புற கலைஞர்கள் அதிகம் வசிக்கின்றனர். ெகாரோனா ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், தனியார் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், வருமானமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இதனை அரசுக்கு தெரிவிக்கும்விதமாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பாண்டியூர் பகுதியில் கலைச்செல்வன், துரைப்பாண்டி ஆகியோர் தலைமையில் இசைக்கலைஞர்கள் நாட்டுப்புற கருவிகளை கொண்டு இசைத்தனர். தடை உத்தரவு இருக்கும் நிலையில் கூட்டாக இசை வாத்தியம் வாசித்ததால், கலைச்செல்வன், துரைப்பாண்டி உட்பட 5 பேர் மீது நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்து நாட்டுப்புற கலைஞர்கள் கூறுகையில், ‘‘தடை உத்தரவால் எந்த வேலையும் கிடைக்காமல் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதுவரை அரசு உதவி எதுவும் கிடைக்காமல் பலரும் பசி பட்டினியில் வாழ்ந்து வருகிறோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். இசை கருவிகள் பராமரிப்பு, குடும்ப செலவுகள் உள்ளிட்ட எதற்கும் வருவாய் இன்றி தவிக்கும் எங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.



Tags : folk artists , Five folk ,artists arrested, demanding ,curfew
× RELATED இலவச வீட்டுமனை கோரி நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டரிடம் மனு