×

கீழப்பாவூர் பகுதியில் கருந்தலை புழு தாக்குதலால் கருகி வரும் தென்னை மரங்கள்: தவிக்கும் விவசாயிகள்

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் பகுதியில் தென்னை மரங்களை கருந்தலை புழு தாக்கி வருவதால் மரங்கள் பட்டுப்போகின்றன. இதனால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், மேட்டுமடையூர், கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட ராஜபாண்டி, வெள்ளகால், நாகல்குளம், பட்டமுடையார்புரம், சாலைப்புதூர், அருணாப்பேரி  உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 600 ஏக்கருக்கு மேல் தென்னை மரம் வளர்த்து வருகின்றனர். தற்போது தென்னையில்  காய் பிடிக்கும் நேரத்தில் கருந்தலை புழு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நோயால் தென்னை மரங்கள் பட்டுப்போய், இலைகள் கருகி, தேங்காய்கள் விளைச்சல் இல்லாமல் காணப்படுகின்றன. விவசாயிகள் கருந்தலை புழு நோய்க்கு மருந்தும் அடித்தும், நோய் தாக்கம் குறையவில்லை. ஒரு தோப்பில் உள்ள மரத்தில் இந்த நோய் தாக்கும் நிலையில் அருகில் இருக்கும் தென்னை தோப்பில் உள்ள அத்தனை மரங்களுக்கும் இந்நோய் வைரஸ் போல் பரவுகிறது. இதனால் தேங்காய்கள் பறிக்க முடியாமல் மிகப்பெரிய நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி ராமராஜா கூறுகையில், கீழப்பாவூர் பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தென்னை விவசாயம் பார்த்து வருகிறோம். தென்னையில் பல நோய்கள் தாக்கியுள்ளது. அந்த நோய்களுக்கு மருந்துகள் தெளித்து நோயை கட்டுப்படுத்தி தென்னை மரங்களை காத்து வந்தோம். ஆனால் இந்த வருடம் கருந்தலை புழு என்ற நோய் தாக்கி தென்னை மரங்கள் பட்டுப்போகின்றன. இதனால் தேங்காய் விளைச்சல் இல்லாமல் காணப்படுகிறது.இந்த நோய்க்கு பலவித மருந்துகள் தெளித்தும் கட்டுப்படவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் தென்னை மரங்களை பார்வையிட்டு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நல்ல தீர்வு காண வேண்டும். பட்டுப்போன மரங்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

நோயை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள்
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் உதயகுமார் கூறியதாவது: தென்னையில் கருந்தலை புழுக்கள் தாக்குதல் பரவலாக கீழப்பாவூர் வட்டாரத்தில் காணப்படுகிறது. இப்புழுவானது இலையின் அடியில் இருந்து உண்பதால் இலைகள் பச்சையம் இழந்து தீயினால் கருகியது போன்று தோன்றமளிக்கும். அதிக வெப்பநிலை நிலவும் கோடை காலத்தில் இப்புழு தாக்குதல் அதிகமாக காணப்படும். தென்னையை  தாக்கும் கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்திட தாக்குதல் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பட்சத்தில் இலைகளை வெட்டி அப்புறப்படுத்திட வேண்டும்.

இளம் தென்னைகளில் தாக்குதல் அதிகமாக இருந்தால் ஒரு லிட்டர் நீருக்கு டைக்ளோர்வாஸ் மருந்து 2 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். வளர்ந்த மரங்களில் தாக்குதல் தீவிரமடையும்போது புழுவை தாக்கி அழிக்கும் ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 1200 எண்கள் வெளியிட வேண்டும். இந்த ஒட்டுண்ணிகளை 2 மாத இடைவெளியில் 3 முறை வெளியிட்டால் இக்கருந்தலைப் புழு  கட்டுப்படுத்தப்படும். இந்த ஒட்டுண்ணிகளை பெற்றிட கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியார் நகரிலுள்ள  தென்னை ஆராய்ச்சி நிலையத்தை 98420 52170 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தையும் 99465 57555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஒட்டுண்ணிகளை பெற்றிடலாம், என்றார்.Tags : worm attack ,coming ,Kilappavur , Kilappavur , Coconut , worm,stranded, farmers
× RELATED வருகிறதா மிதிலி புயல்… வங்கக்கடலில்...