×

கொரோனா பரவலால் தொட அச்சம் ‘கை படாமல்’ கை கழுவ எளிய இயந்திரம்: பழநியை சேர்ந்தவர் அசத்தல் கண்டுபிடிப்பு

பழநி: கொரோனா கைகழுவும் முறைக்கு கையை பயன்படுத்தாமல் இருக்க எளிய இயந்திரத்தை பழநி வாலிபர் கண்டுபிடித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கை கழுவ வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும், ஒருவர் தொடும் தண்ணீர் குழாயை மற்றொருவர் தொடுவதற்கு பெரும்பாலானோர் அஞ்சி வருகின்றனர். இக்குறையை போக்கும் வகையில் கைபடாமல் கை கழுவ, திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே வயலூரைச் சேர்ந்த கான்ட்ராக்டரான ராஜா ஞானப்பிரகாசம்(39), ஒரு எளிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கு ‘மொபைல் வாஷ்பேசின்’ என பெயர் சூட்டி உள்ளார்.

10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், ஏற்கனவே உள்நாட்டு தயாரிப்புகளைக் கொண்டு பாராகிளைடர், காரின் டேஷ்போர்டில் தண்ணீர் குடிக்கும் இயந்திரம் போன்றவற்றை கண்டுபிடித்தார். ‘மொபைல் வாஷ்பேசின்’ இயந்திரத்தின் ஒரு புறத்தில் காலால் பெடல் செய்தால் கிருமிநாசினி கைகளில் விழுகிறது. மற்றொரு புறத்தில் பெடல் செய்தால் தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் கைகளை பயன்படுத்தாமல் கைகளை கிருமிநாசினி மற்றும் தண்ணீரால் கைகழுவ முடிகிறது.இதுகுறித்து ராஜாஞானப்பிரகாசம் கூறியதாவது,பொது இடங்களில் வைக்கப்படும் கை கழுவும் பாத்திரம் மற்றும் பொருட்களை தொடுவதற்கு பலரும் அஞ்சுகின்றனர். இதற்கு மாற்று ஏதாவது கண்டுபிடித்து தருமாறு பொள்ளாச்சி சப்-கலெக்டர் டாக்டர் வைத்தீஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார். எனவேதான், இந்த இயந்திரத்தை உருவாக்கினேன். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்களுக்கும் பாதுகாப்பானது.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Corona ,Palani , Corona , 'hand ,simple machine, Palani,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை