×

மணலியில் இருந்து குடும்பத்தினருடன் ஒடிசாவுக்கு நடந்து சென்ற 74 தொழிலாளர்கள் மீட்பு

திருவொற்றியூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் மணலியில் இருந்து குடும்பத்துடன் நடந்தே ஒடிசாவுக்கு செல்ல முயன்ற 74 கூலி தொழிலாளர்களை போலீசார் மீட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மணலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 74க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வேலை மற்றும் வருவாயின்றி தவித்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால், நேற்று முன்தினம் மாைல குடும்பத்துடன் நடந்தே ஒடிசாவுக்கு புறப்பட்டனர். தகவலறிந்த எண்ணூர் போலீஸ் உதவி ஆணையர் உக்கிரபாண்டியன், மணலி இன்ஸ்பெக்டர் கண்ணகி ஆகியோர் விரைந்து சென்று, கொசப்பூர் அருகே அவர்களை மீட்டு, வாகனங்கள் மூலம் மணலி பேருந்து நிலைய வளாகத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, ஊரடங்கால் தங்களுக்கு வருவாய் இல்லை, உணவில்லை. இதனால், ரயில் மற்றும் பேருந்துகள் இயங்காததால் நடந்தே எங்களது சொந்த ஊருக்கு செல்கிறோம், என்றனர். அதற்கு, ஊரடங்கு அமலில் உள்ளதால் இவ்வாறு செல்லக்கூடாது. எனவே, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஏற்பாடு செய்துள்ள வீடுகளிலேயே தங்க வேண்டும், என்று போலீசார் அறிவுரை வழங்கினர். பின்னர், மணலி மண்டல உதவி ஆணையர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : families ,Odisha ,Manali , Rescue , 74 workers , Manali , families ,Odisha
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...