×

முடியாத போட்டிகள்; முடியும் ஒப்பந்தங்கள்சிக்கலில் தவிக்கும் கால்பந்து கிளப்கள்

ஜூரிச்: ஐரோப்பிய சாம்பியன் லீக் உட்பட  பல்ேவறு கால்பந்து போட்டிகள் கொரோனா பீதி காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வீரர்களுக்கான ஒப்பந்தங்கள் முடியும் நிலையில் உள்ளன. எனவே அவற்றை புதுப்பிப்பதா வேண்டாமா என்ற சிக்கலில் உலகம் முழுவதும், கால்பந்து கிளப்கள் தவித்து வருகின்றன.இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகளை தவிர மற்ற நாடுகளில் கால்பந்து விளையாட்டுதான் பிரபலம். கிரிக்கெட் தாயகமான இங்கிலாந்திலும் கால்பந்து ரசிகர்கள்தான் அதிகம்.அங்கு நடைபெறும்  இங்கிலீஷ் கால்பந்து பிரிமீயர் லீக், ஐரோப்பிய சாம்பியன் லீக்   போட்டிகள்  உலகளவில் பிரபலம். இவற்றில் ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, என ஐரோப்பிய நாடுகளின் கிளப்கள் பங்கேற்கும்.  இந்த கிளப்களுக்காக உலகம் முழுவதும் உள்ள பிரபலமான, முன்னணி கால்பந்து வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஜென்டீனா, உருகுவே, பராகுவே நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த கிளப்களில் அதிகம். அந்த வீரர்கள் பல நூறு கோடிகள் ஒப்பந்த ஊதியமாக பெறுகின்றனர். வழக்கமாக வீரர்களுக்கான ஒப்பந்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முடியும்.  ஜூலை மாதத்தில் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும் அல்லது புதிய ஒப்பந்தங்கள் போடப்படும்.  அதிக வருவாய், பிரபலமான கிளப்கள் போன்ற காரணங்களுக்காக வீரர்கள் இடம் பெயர்வது வாடிக்கை.
அதிலும் பார்சிலோனா, மிலன், ரியல் மாட்ரிட் போன்ற கிளப்களுக்காக விளையாட வேண்டும் என்பது பல வீரர்களின் கனவு, லட்சியம். சொந்த நாட்டின் தேசிய அணிக்காக விளையாடுவதை விட இந்த கிளப்களுக்காக விளையாடினால் பிரபலமும் அடையலாம், வருவாயும் குவியும்.

இப்போது பிரச்னை கொரோனா வைரஸ் மூலம் பரவியுள்ளது. ஆம் கொரோனா பீதி காரணமாக சாம்பியன் லீக், பிரிமீயர் லீக் உட்பட பல்வேறு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதனால் ஒளிபரப்பு, விளம்பர வருவாய் இல்லை.  மேலும் கொரோனாவின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.  உதாரணமாக பிரிமீயர் லீக் போட்டிகள் மே மாதத்தில் முடியும் வகையில் அட்டவணை போடப்பட்டன. ஆனால் கொரோனா பீதி காரணமாக மார்ச் மாதத்துடன் போட்டிகள் நிறுத்தப்பட்டன. இன்னும் 91 போட்டிகள் நடைபெற வேண்டும். இந்நிலையில் வீரர்களின் ஒப்பந்தம் ஜூன் மாதத்துடன் முடிகின்றன.

அதனால் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா, வீரர்களின் ஒப்பந்தங்களை புதுப்பிக்க பரிந்துரை செய்துள்ளது.  ஆனால் பல வீரர்கள் ஜூலை மாத்தில் புதிய கிளப் மாற ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுள்ளனர்.   அதனால்  ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை திருத்த வேண்டும். அதற்கு பழைய கிளப், புதிய கிளப், வீரர் என முத்தரப்பினரிடமும் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். ஆனால் அது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல பொதுவாக ஒப்பந்தங்கள், அந்தந்த நாட்டின் தேசிய சட்டங்களின்படிதான் அமல்படுத்த அல்லது ரத்து செய்ய முடியும்.  அதனை கால்பந்து சங்கங்களின் விதிகளின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாது.  அதனால் சிக்கல் தொடர்கிறது.

ஏற்கனவே போட்டிகள் நடக்காததால் வருவாய் பற்றக்குறை ஏற்பட்டு நிதி பிரச்னையில்  கிளப்கள் உள்ளன. இப்போது வீரர்களின் ஒப்பந்தம் நீட்டிப்பு, ஊதியம் வழங்குதல் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் எப்போது போட்டிகள் நடத்தப்படும் என்பது தெரியவில்லை.
அதனால்  கால்பந்து சங்கங்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்  சிக்கலில் தவித்து வருகின்றன.

தள்ளிப்போன போட்டிகள்
ஐரோப்பிய லீக், சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான யுரோ 2020 கோப்பை, தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டன. பிரிமீயர் லீக், பெடரஷன் கோப்பை  கால்பந்து போட்டிகள் ஏப்.30 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதுதான் சிக்கல்
பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று செல்சீயா. இங்கிலாந்து கிளப்பான இந்த அணிக்காக விளையாடும் முக்கிய வீரர்களான ஆலிவர் கிரவுட்(பிரான்ஸ்), வில்லியன்(பிரேசில்) ஆகியோரின் ஒப்பந்தம் ஜூன் 30ம் தேதியுடன் முடிகிறது. ஆனால் இந்த அணி இன்னும் 9 ஆட்டங்களில் விளையாட வேண்டி உள்ளது.  அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணியாகவும் அது நீடிக்கிறது. அதுமட்டுமல்ல நெதர்லாந்தின்  அஜாக்ஸ் கிளப்புக்காக விளையாடி வரும் ஹக்கிம் சீயாக்கை சுமார் 334கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது செல்சீயா. இந்த ஒப்பந்தம் ஜூலை முதல் அமலுக்கு வர உள்ளது. அதனால் செல்சீ மட்டுமல்ல பெரும்பான்மையான கிளப்கள் இப்படி ‘என்ன செய்வது’ சிக்கலில் தவிக்கின்றன.



Tags : matches ,Football Clubs , European Champions League, Deals, Football Clubs
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி