×

ஊரடங்கு உத்தரவு காலத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்களுக்கு பணத்தை திரும்ப தர முடிவு: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதியில் மே 30ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக முன்பதிவு செய்த பக்தர்களின் பணம் திரும்ப செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் ஏழுமலையான் கோயிலில் மார்ச் 13ம் தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித கட்டண சேவைகளும் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் அன்று முதல் மே 31ம் தேதி வரை ஆன்லைன்,  தபால் நிலையங்களில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு  டிக்கெட்டிற்கான கட்டணத்தை திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பக்தர்கள், தொடர்புடைய டிக்கெட் விவரங்கள், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி குறியீடு விவரங்களுடன் helpdesk@tirumala.org மின்னஞ்சலுக்கு  அனுப்ப வேண்டும்.

இதற்கிடையே, கோயிலில் தற்போது சில ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 8.30 மணிக்கு கோயில் நடை சாத்தியதும் திருமலை முழுவதும் அமைதியான சூழல் காணப்படுவதால் வனவிலங்குகள் தொடர்ந்து வெளியே வந்த படி உள்ளது. குறிப்பாக காட்டுப்பன்றிகள், நாய் உள்ளிட்ட விலங்குகள் நான்கு மாடவீதிகளில் அவ்வப்போது சுற்றி வருகிறது. காட்டுப்பன்றிகள் கோயிலின் மகா துவாரம் என்றழைக்கப்படும் ராஜகோபுரம் உள்ள இடத்தில் தற்போது உள்ள பித்தளை கதவுகள் வழியாக உள்ளே சென்றுவிடாமல் இருப்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் இரும்பு வேலிகளை அமைத்து உள்ளனர்.

மேலும், திருமலை அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அமைந்துள்ள பகுதியில் தினமும் இரவு நேரத்தில் கரடிகள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.



Tags : pilgrims ,curfew ,Tirupati Devasthanam ,Darshan , Curfew, Darshan, Reservation, Tirupati Devasthanam
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...