×

27 நாட்களாக ஓட்டலில் தங்கியிக்கும் அவலம் நேபாளத்தில் 24 பேர் சிக்கி தவிப்பு

* ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் அவதி
*  தமிழக அரசு மீட்க கோரிக்கை

சென்னை:கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடுகளுக்கு இடையே எல்லைகள் மூடப்பட்ட நிலையில் நேபாளத்தில் கடந்த 27 நாட்களாக சிக்கி தவித்து வரும் 24 பேர் தங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  சென்னையில் இருந்து அயோத்தி, காசி, நேபாளம் உள்ளிட்ட இடங்களுக்கு தனியார் டிராவல் நிறுவனம் மூலம் கடந்த மார்ச் 11ம் தேதி 5 பெண்கள், 19 ஆண்கள் உட்பட 24 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் மார்ச் 22ம் தேதி நேபாளத்தில் உள்ள முக்திநாத் சென்று சாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து புறப்படுவதற்குள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு காரணமாக நேபாளம்- இந்தியா எல்லைகள் மூடப்பட்டன.

இதனால், நேபாளம் போத்ராவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ளனர். இது குறித்து நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது உறவினர்களை அணுகி இது  தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் நேபாளத்தில் உள்ள இந்திய  துணை தூதரகத்தை தொடர்பு பேசியும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் 27 நாட்களாக ஓட்டலில் தங்கியுள்ள நிலையில், அவர்கள் கைகளில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டது.  இது குறித்து நேபாளத்தில் சிக்கியுள்ள ஜெயராமன் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் நேபாளத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எங்களில் பாதிக்கு மேல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.

பெரும்பாலும் கொரோனாவால் வயதானவர்களுக்கு தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்களால் எங்கும் செல்ல முடியாத நிலையில், ஓட்டலின் உள்ளேயே தங்கியுள்ளோம். ஒரு வேளை சாப்பாடு கிடைப்பதே கஷ்டமாக உள்ளது. இங்குள்ள பலரது உடல் நிலையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கு நிலைமை சீராவதில் மேலும் காலதாமதம் ஆகலாம். எனவே, எங்களை இங்கிருந்து மீட்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேபாள அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : Nepal ,hotel stay , Corona, Hotel, Nepal
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது