×

மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்களை அரசியல் கட்சிகள் வழங்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நிவாரணங்கள் வழங்க விரும்புவோர் எந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை 48 மணி நேரத்துக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
பொருட்களை வழங்க செல்லும்போது வாகன ஓட்டுநர்களை தவிர்த்து 3 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது.

சென்னை: ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துவிட்டு நிவாரண பொருட்களை வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையர், மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்களையும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ ராஜசேகரன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.    திமுக தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன், வக்கீல்கள் கிரிராஜன் ஆகியோர் ஆஜராகினர். காங்கிரஸ் தரப்பில் வக்கீல் சூரியபிரகாசம், அருள்ராஜ், ஆரோக்கியதாஸ், ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:  கொரோனா என்ற கொடிய வைரஸ் சமூக தொற்றாக ஒருபோதும் மாறிவிடக்கூடாது. மக்களின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடு,  திட்டங்களை உருவாக்கியுள்ளனர். இந்த நோய் சமூக பரவலாகிவிடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளன. அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் தடையின்றி சென்றடைய வேண்டும். தன்னலமற்ற ஈகையும், உதவும் கரங்களின்  மனிதாபிமானமும் நிச்சயமாக போற்றப்பட வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் நிவாரணமாக வழங்கும் உணவு பொருட்களை அரசு அதிகாரிகளிடம் தரவேண்டும் என்பதை ஏற்க முடியாது.

மக்களுக்கு உணவுப் பொருட்களை தருவதில் சில ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். எனவே, அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகளை வழங்க நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கிறோம். நிவாரணங்கள் வழங்க விரும்புவோர் எந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை 48 மணி நேரத்துக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும். தகவலை பெற்ற பிறகு உணவு பொருளாக இருந்தால் சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். உணவு தயாரித்தல் மற்றும் உணவு வழங்குதல் அந்தந்த பகுதிக்குள்ளேயே இருக்க வேண்டும். அதே நேரத்தில், அந்த பகுதி (கொரேனாவால்) மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்க கூடாது.

நிவாரணம் வழங்கும்போது கடைபிடிக்க வேண்டிய நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தனிமனித, சமூக இடைவெளியையும் அவசியம் கடைபிடிக்க வேண்டும். பொருட்களை வழங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் போலீசார் ஒத்துழைக்க வேண்டும். பொருட்களை வழங்க செல்லும்போது வாகன ஓட்டுநர்களை தவிர்த்து 3 நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது. அதேபோல அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. இந்த நிபந்தனைகளுடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : parties ,Madras High Court , Corona, Food for People, Essential Products, Political Parties, Madras High Court,
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு