×

வைரஸ் தொற்று 2வது நிலையில்தான் இருக்கிறது தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் குறைகிறது : முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது நிலையில்தான் இருக்கிறது. இப்போது  நோயின் வேகம் குறைந்துள்ளது. நேற்று 25 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்னும் 2, 3 நாளில் படிப்படியாக குறைந்துவிடும்  என்று முதல்வர் எடப்பாடி கூறினார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையொட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு அறிவித்தவைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றி கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இரண்டு, மூன்று நாட்களாக நோய் தாக்கம், வீரியம் தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது.  வென்டிலேட்டர், பிசிஆர் கிட், மாஸ் வாங்க தமிழக அரசு இப்போதுதான் முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஏற்கனவே, அரசிடம் போதுமான கருவிகள் உள்ளது. . கொரோனா நோய் தடுப்பில் ஈடுபட்ட மருத்துவர்கள், பணியாளர்களுக்கு நோய் தொற்று 13 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அரசு மருத்துவர்கள் 6 பேர். தனியார் மருத்துவர்கள் 5 பேர். தூய்மை பணியாளர் ஒருவர், சுகாதார பணியாளர் ஒருவர்.
 
மத்திய அரசு சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று பகுதியாக அறிவித்துள்ளது. பச்சை என்றால் தொற்று ஏற்படாத பகுதி. ஆரஞ்சு என்பது ஒன்று முதல் 15 பேர் பாதிக்கப்பட்ட பகுதி. அதற்கு மேற்பட்டதெல்லாம் சிகப்பு பகுதி ஆகும். சிகப்பு பகுதிகள் எல்லாம், தற்போதுள்ள நடைமுறையே அதே நடைமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது நிலையில்தான் இருக்கிறது. இப்போது நோயின் வேகம் குறைந்துள்ளது. நேற்று 25 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2, 3 நாளில் படிப்படியாக குறைந்துவிடும். காரணம், நோய் பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதனால் மூன்று, நான்கு நாட்களில் ஜீரோ நிலைக்கு வந்துவிடும் என்று நம்புகிறோம். 10ல் இருந்து 15 நாட்களுக்குள் தற்போதுள்ள பாசிட்டிவ் கேஸ்கள் எல்லாம் குணம் அடைந்து வீடு திரும்பி விடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஆனால், இனி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை சிறப்பான முறையில் தடுத்து வருகிறது. ஆனால், அதற்கு எதிர்க்கட்சிகள் தடை போடுகிறது. எதிர்க்கட்சி எம்பிக்கள் 38 பேர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்.

மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழக மக்களுக்கு நிதியை அவர்கள் பெற்றுத்தர வேண்டும். பத்திரிகையாளர்களும், செய்தி சேகரிக்க செல்லும்போது நோய் தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும். உயிரிழப்பு ஏற்பட்டால் 5 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பாசிட்டிவ் 25; இறப்பு 15
தமிழகத்தில் நோய் தொற்று உறுதி  செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் (15ம் தேதி) வரை 1242 ஆக  இருந்தது. நேற்று (16ம் தேதி) புதிதாக 25 பேருக்கு நோய் தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.அதன்படி மொத்தம் 1,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோயை தமிழக அரசு கட்டுப்படுத்தி இன்று  (நேற்று) 25 பேருக்கு மட்டுமே பாசிட்டிவ் வந்துள்ளது. நோய் தொற்று  இருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் 1876 பேர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா நோய் பாதித்து சிகிச்சைக்கு பின் 180  பேர் வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார் முதல்வர் பழனிசாமி.

20ம் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி?
ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கலாம். கிராமத்தில் வேளாண் பணியை மேற்கொள்ளலாம். உணவு சம்பந்தமான தொழிற்சாலையும் இயங்கலாம்.  இதன்மூலம் ஓரளவு வேலைவாய்ப்பு கிடைத்துவிடும். மத்திய அரசாங்கம் அறிவித்த தகவல்கள் முழுமையாக எங்களுக்கு கிடைக்கவில்லை. குறிப்பிட்டுதான் சொல்லியுள்ளனர். அதனால், தமிழகத்தில் நிதித்துறை செயலாளர்  கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளோம்.  இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஏப்ரல் 20ம்  தேதிக்கு பிறகு எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று  அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.

கொரோனா பணக்காரர்களின் நோய்
கொரோனா வெளிநாட்டில் இருந்து வந்த பணக்காரர்களால் வந்த நோய். இங்கு ஏழைகளுக்கு நோய் இல்லை. அவர்களிடம் தாராளமாக பேசலாம். பணக்காரர்களை பார்த்தால்தான் பயமாக உள்ளது. வெளிநாடு போய் வந்து விட்டு நோயை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறார்கள். வெளி மாநிலம் சென்று வந்தவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இந்த நோய் வந்துள்ளது. தமிழகத்தில் இந்த நோய் உருவாகவில்லை என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.

காய்கறி விலை குறைவு
தமிழகத்தில் காய்கறி விலை தற்போது  குறைந்துள்ளது. தக்காளி கடந்த மாதம் 20க்கு விற்றது தற்போது 15க்கு  விற்கப்படுகிறது. வெங்காயம் 35க்கு விற்றது தற்போது 25க்கு  விற்கப்படுகிறது. உருளைகிழக்கு 25க்கு விற்கப்படுகிறது. எல்லா காய்கறி  விலையும் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை  உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதையொட்டி  வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி  தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்று முதல்வர் கூறினார்.

Tags : state , Coronavirus, Corona Dissemination, Chief Edappadi
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...