×

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர்?... கடலோர காவல்படை கைப்பற்றி விசாரணை

சீர்காழி: சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய  மர்மபொருள் ராக்கெட் லாஞ்சரா என கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் நேற்று பழமையான ஒரு அடி உயரமும், 11 இஞ்ச் சுற்றளவும் கொண்ட சிலிண்டரின் மீது காற்றாடி வைக்கப்பட்டது போன்ற ஒரு பொருள் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் சீர்காழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ், எஸ்ஐ ராஜா ஆகியோர் சென்று கரை ஒதுங்கிய பொருளை ஆய்வு செய்தனர்.

இதில் அந்த பொருள் பழமையான சிலிண்டர் மீது காற்றாடி வைத்தது போன்ற அமைப்புடைய ராக்கெட் லாஞ்சர் தோற்றம் போல் இருந்ததால், இந்த ராக்கெட் லாஞ்சர் போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பலில் இருந்து கழன்று விழுந்து கடல் அலையில் சிக்கி கரை ஒதுங்கி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கடலோர காவல்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய  ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  ராக்கெட் லாஞ்சர் கரை ஒதுங்கிய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நாகையிலிருந்து வெடிகுண்டு செயலிழப்பு  நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கடலோர காவல் படையினர் விசாரணைக்கு பிறகு முழு விவரம் தெரிய வரும்.


Tags : rocket launcher ,coast ,Sirkazhi ,Coast Guard ,Seaside ,beach , Corset, beach, rocket launcher
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...