×

புதுவை அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவுகள் மீண்டும் செயல்பட தொடங்கியது: ஜிப்மரில் தொடர்ந்து தடை

புதுச்சேரி: புதுவை அரசு மருத்துவமனையில் 21 நாட்களாக செயல்படாமல் இருந்த வெளிப்புற சிகிச்சை பிரிவுகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. அங்கு வரும் நோயாளிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜிப்மரில் இப்பிரிவுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி உள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய அரசு மார்ச் 24 முதல் ஏப்ரல் 14ம்தேதி வரை (21) நாட்கள் தேசிய ஊரடங்கை அமல்படுத்தியது.

 இதனால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். அதன்பிறகு 2வது கட்டமாக மே 3ம்தேதி வரை (19) நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக சில நிபந்தனைகளை மத்திய உள்துறை தளர்த்தி உள்ளன. புதுவையில் தமிழ்புத்தாண்டுடன் 21 நாள் முதல்கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் தொடர்ந்து தடை அமலில் உள்ளது. இருப்பினும் அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வெளியே வந்து செல்கின்றனர். இதற்கிடையே 21 நாள் ஊரடங்கு காரணமாக புதுவையில் அரசு பொது மருத்துவமனை, அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, ஜிப்மர் ஆகியவற்றில் வெளிப்புற சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டிருந்தன.

இதன் காரணமாக டயாலிசிஸ், நீரழிவு, இருதய நோய், தோல், கண் காது மூக்கு தொண்டை, பொது மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் மிகுந்த சிரமத்தில் இருந்தனர். ஏற்கனவே டாக்டர்கள் எழுதி கொடுத்த மருந்து, மாத்திரைகளை வெளியில் உள்ள மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவு நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் முதல்நாளில் மக்கள் அதிகளவில் வராத நிலையில், 2ம் நாளான இன்று வெளிப்புற சிகிச்சைக்காக அதிகளவில் நோயாளிகள் வந்திருந்தனர்.

 அவர்கள் அனைவருக்கும் நுழைவுசீட் முன்பதிவு செய்யப்பட்டு அந்தந்த பிரிவு பரிசோதனை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் முககவசம் அணிய கட்டாயமாக்கப்பட்டனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கையில் அமர அங்கிருந்த பணியாளர்கள் அறிவுறுத்தினர். அதன்படி நோயாளிகள் வரிசையாக அமர்ந்து பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனர். கதிர்காமம் அரசு மருத்துவமனை சிறப்பு கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளதால் அங்கு வெளிப்புற சிகிச்சை அனுமதிக்கப் படவில்லை.

அதேவேளையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிப்புற சிகிச்சை பணிகள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளன. ஏற்கனவே சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவற்றை மட்டுமே பரிசோதித்த டாக்டர்கள் தற்போது அனைத்து நோய்க்கான வெளிப்புற பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மருக்கு தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வெளிப்புற சிகிச்சைக்காக 90 சதவீதத்துக்கும் அதிகமான நோயாளிகள் வருவர் என்பதால் அங்கு இப்பிரிவுக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.



Tags : Outpatient departments ,Government Hospital ,Puthuvai , Puthuvai, Government Hospital, Treatment Units
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு