×

ஆண்டிபட்டி பகுதி நெசவாளர்கள் வேதனை: ரூ.15 கோடி சேலைகள் தேக்கம்

* விற்பனைக்கு அனுப்ப விலக்கு அளிக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி: கொரோனா ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், ஆண்டிபட்டியில் ரூ.15 கோடி மதிப்பிலான சோலைகள் தேக்கமடைந்துள்ளன. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சண்முகசுந்தரபுரம், கொப்பையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு சுங்குடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பர் காட்டன், காரைக்குடி காட்டன், கோடம்பாக்கம் காட்டன், 60க்கு 80, 80க்கு 60, 80க்கு 80 உள்ளிட்ட சேலை ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 14 ஆயிரம் சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் விருதுநகர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ெகாரோனா ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டிபட்டி பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பிலான சேலைகள் விற்பனைக்கு அனுப்பப்படாமல் தேங்கி கிடக்கிறது.

சக்கம்பட்டியை சேர்ந்த நெசவாளர் மகேஸ்வரன் கூறுகையில், ‘‘ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் உற்பத்தி செய்த சேலைகளை வெளிமாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம். இதேபோன்று சேலைகள் உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருட்களான நூல் வராததால் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிப்பது போல, ஜவுளி பொருள்களை விற்பனைக்கு அனுப்பவும் விலக்கு அளிக்க வேண்டும். மூன்று மாதம் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும். நெசவாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : weavers , Antipatti ,weavers ,agony, Rs.15 cores
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி