×

பெரிய ஏரியில் துர்நாற்றம் வீசுவதால் மீன் பிடிக்க தடை: தாசில்தார் உத்தரவு

போளூர்: போளூர் பெரிய ஏரியில்  துர்நாற்றம் வீசுவதால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் உத்தரவிட்டார். போளூர் சம்பத்கிரி மலை அடிவாரத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால் நகரில் குடிநீர் பிரச்னை இருக்காது என்பதால், இந்த தண்ணீரை விவசாய பயன்பாட்டிற்கு திறந்து விடக்கூடாது என ஊர்மக்கள் முடிவு செய்து ஏரி மதகை அடைத்து விட்டனர். இதில் ஏராளமான மீன்கள் உற்பத்தியாகி வருகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான இளைஞர்கள் ஏரியின் மையப்பகுதியில் வலைகட்டி மீன் பிடித்து வருகின்றனர். இதில் சில மீன்கள் தண்ணீர் பாம்புகள், தவளைகள் போன்றவை வலைகளில் சிக்கி இறக்கின்றன. அவ்வாறு இறக்கும் பாம்பு மற்றும் தவளைகளை ஏரியில் வீசி விடுகின்றனர்.

தற்போது, வேகமாக தண்ணீர் குறைந்து வருவதால், ஏராளமானோர் ஏரியில்  நடந்து செல்வதாலும், தவளை மற்றும் பாம்புகள் இறந்து கிடப்பதால், ஏரி தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசு கிறது. மேலும், போளூர் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் கிணறுகளும் இந்த பகுதியில் உள்ளன. இதனால், குடிநீரும் மாசடைந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, ஏரிதண்ணீரை பாதுகாக்கவும், சட்ட விரோதமாக மீன் பிடியை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், போளூர் தாசில்தார் பா.ஜெயவேலு, வருவாய் ஆய்வாளர் சு.பிரேம்நாத், கிராம நிர்வாக அலுவலர் எம்.மயிலரசன் மற்றும் பொதுப்பணித்துறை கள அலுவலர் உமாபதி ஆகியோர் நேற்று போளூர் பெரிய ஏரிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு தூண்டிலிலும். வலை போட்டும் மீன் பிடித்து கொண்டிருந்தவர்களை அழைத்து இங்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தாசில்தார் கூறினார். மேலும், தடையை மீறி மீன் பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார். மேலும், மீன் பிடிக்க தடை குறித்த அறிவிப்பு பலகை வைக்கவும் தாசில்தார் ஜெயவேல் உத்தரவிட்டார்.

Tags : lake , Dasillard orders , catching fish , stench , big lake
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு