×

அரசு ஆலையில் பேக்கிங் பொருள் இல்லாததால் குன்னூரில் இருந்து கேரளாவிற்கு தேயிலைத்தூள் அனுப்பும் பணி பாதிப்பு

குன்னூர்: குன்னூர் அரசு தேயிலை தொழிற்சாலையான இண்ட்கோவில்  பேக்கிங் செய்ய பொருட்கள் இல்லாததால் கேரளாவிற்கு தேயிலை தூள் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.  நீலகிரி மாவட்டத்தில் பல ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டு 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேர் மறைமுகமாக தேயிலை விவசாயத்தை சார்ந்துள்ளனர்.  விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் பசுந்தேயிலையை பறித்து தனியார் மற்றும் அரசு தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். பசுந்தேயிலைக்கான விலையை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு அளிக்கின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தியில் அரசுக்கு சொந்தமான 16 இண்ட்கோ ஆலைகள் ஈடுபட்டுள்ளன. இந்த ஆலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத்தூள் தலைமையகமான குன்னூர் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தேயிலை தூள் ஏலம் விடப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில் தேயிலைத்தூளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரசு வழங்கினால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக அரசு இதை கண்டுகொள்ளாத நிலையில், கேரள அரசு 1250 டன் இண்ட்கோ தேயிலைத்தூளை 2020-20021ம் நிதியாண்டில் கொள்முதல் செய்ய முன் வந்து அதற்கான ஆர்டரை இண்ட்கோ ஆலைக்கு வழங்கியது. இந்த தேயிலைத்தூளை ரேஷன் கடைகள் மூலம் அம்மாநில மக்களுக்கு இலவசமாக கேரள அரசு வினியோகிக்க முடிவு செய்து இருந்தது.  இந்த நிலையில் கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு கடந்த 25ம் தேதி முதல் அமலில் உள்ளதால் குன்னூரில் உள்ள இண்ட்கோ தொழிற்சாலைகளில் தேயிலை பேக்கிங் செய்யப்படும் அட்டை பெட்டிகள் வரத்து இல்லாமல் தீர்ந்து விட்டன.

வெளி மாநிலங்களில் இருந்து இப்பெட்டிகள் வராததால் தேயிலைத்தூளை பேக்கிங் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் கேரளாவிற்கு தேயிலைத்தூள் கொண்டு செல்ல குன்னூர் இண்ட்கோ ஆலை வளாகத்தில் தயார் நிலையில் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. லாரி ஓட்டுனர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இது குறித்து இண்ட்கோ ஆலை வட்டார அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கேரள அரசு அம்மாநில ரேஷன் கடையில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக இந்நிதியாண்டில் 1240 டன் தேயிலைத்தூளை இண்ட்கோ நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்ய முன் வந்தது. மாதந்தோறும் உற்பத்தியாகும் தேயிலைத்தூளை அனுப்ப திட்டமிட்டு முதல் கட்டமாக தேயிலைத்தூளை லாரிகளில் அனுப்பும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. ஆனால் ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கான தேயிலையை தனியார்களுக்கு அனுப்பி விட்டோம்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தேயிலைத்தூள் பேக்கிங் செய்யும் அட்டைப்பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் தீர்ந்து விட்டன. இதனால் தேயிலை தூளை லாரியில் கேரளா அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து அட்டைபெட்டி வர வேண்டியுள்ளது. அவை வந்தால் தான் தேயிலைத்தூளை கேரளா அனுப்ப முடியும், என தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தியில் அரசுக்கு சொந்தமான 16 இண்ட்கோ ஆலைகள் ஈடுபட்டுள்ளன. இந்த ஆலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத்தூள் தலைமையகமான குன்னூர் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தேயிலை தூள் ஏலம் விடப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Tags : government plant ,Coonoor ,Kerala ,Government , lack , packing material , Government Factory
× RELATED வேலை பறிபோச்சு... செலவுக்கு...