×

நடுவழியில் சிறப்பு விமானம் கோளாறு சென்னையில் 24 மணிநேரம் 215 ஜப்பானியர்கள் தவிப்பு

சென்னை:  ஜப்பானியர்களை அழைத்துச்செல்ல ஜப்பானில் இருந்து புறப்பட்ட தனி விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக 24 மணிநேரம் தாமதமாக வந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஜப்பானியர்கள் தவித்தனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்திலிருந்த 600க்கும் மேற்பட்ட ஜப்பானியர்களை ஜப்பான் அரசு தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைக்க முடிவு செய்தது. ஊரடங்கால் விமான சேவைகள் இல்லாததால் ஜப்பான் தூதரக அதிகாரிகள், இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். அதன்படி கடந்த வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் ஜப்பானிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானங்கள்  440 ஜப்பானியர்களை அழைத்துச்சென்றன. மேலும், 215 ஜப்பானியர்கள் நேற்று முன்தினம் இரவு சிறப்பு விமானத்தில் அழைத்து செல்லப்படுவதாக  அறிவிக்கப்பட்டது. எனவே, ஜப்பான் தூதரக அதிகாரிகள் ஏற்பாட்டில் 215 ஜப்பானியர்கள் சிறப்பு வாகனங்கள் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சுங்கச்சோதனை  உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு பயணிகள் சமூக இடைவெளியில் விமானத்தில் ஏற காத்திருந்தனர்.  இந்நிலையில், இவர்களை ஏற்றிச்செல்வதற்காக ஜப்பான் டோக்கியோ நகரில் உள்ள நாரிட்டா விமான நிலையத்திலிருந்து நிப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் நடுவழியில் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. அங்கு விமானத்தை பழுதுபார்க்கும் பணி நடந்தது. ஆனால் உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை. இதையடுத்து விமான நிறுவனம், ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது. சென்னை விமானநிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு விமானம் ரத்து என்ற தகவல் கொடுக்கப்பட்டது. பின்பு ஜப்பான் தூதரக அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயணிகள் அனைவரையும்  விமான நிலையத்திலிருந்து சொகுசு பஸ்களில் ஏற்றி  சென்னை நகரில் உள்ள பல்வேறு விடுதிகளில் தங்கவைத்தனர். விமானம் பழுது பார்க்கப்பட்டு பாங்காங்கிலிருந்து நேற்று இரவு  சென்னை வந்தது. விடுதியில் தங்க வைக்கப்பட்டவர்கள் மீண்டும் விமான நிலையம் அழைத்துவரப்பட்டனர்.   பின்பு அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு  நேற்று இரவு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதனால் சுமார் 24 மணிநேரம் தவித்த ஜப்பானியர்கள் நிம்மதி அடைந்தனர். 


Tags : Chennai ,Japanese , 215 Japanese , 24 hours ,hennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...