×

ஆவடி ஓசிஎப் தொழிற்சாலையில் 30 ஆயிரம் முழு உடல் கவசம் தயாரிக்க முடிவு: 1100 முதல் கட்டமாக வழங்கல்

ஆவடி: கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இதையொட்டி, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு முழு உடல் கவசம், முக கவசம் ஆகியவை அதிகமாக தேவைப்படுகிறது. இதனையடுத்து, கவசங்களை தயாரிக்க ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலைக்கு (ஓ.சி.எப்) பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. அதன்படி படைத்துறை உடை தொழிற்சாலைக்கு 30 ஆயிரம் முழு உடல் கவசம் தயாரிக்கும் பணியில், தொழிலாளர்கள் 2 ஷிப்டாக பணியாற்றுகின்றனர். இதற்கிடையில் முதல் கட்டமாக 1100 முழு உடல் கவசத்தை தொழிலாளர்கள் தயாரித்து முடித்துள்ளனர். இதனை கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க (சிட்ரா) ஆய்வகத்தில் ஆய்வு செய்து தரம் குறித்து சான்றிதழ் பெறப்பட்டது.

இந்நிலையில் தயாரிக்கப்பட்ட உடல் கவசத்தை லாரி மூலம் மத்திய சுகாதார துறைக்கு, படைத்துறை உடை தொழிற்சாலையின் பொதுமேலாளர் சுர்ஜித் தாஸ் அனுப்பி வைத்தார். அப்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் குமார், வேலுச்சாமி, வில்சன், பணிக்குழு செயலாளர் குமார் உள்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர். இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ஓசிஎப் தொழிற்சாலையில் 3 நாட்களுக்கு ஒருமுறை முழு உடல் கவசத்தை தயாரித்து அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி வாரத்திற்கு 2 முறை 3000க்கு மேற்பட்ட முழு உடல் கவசத்தை தயாரித்து மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மருத்துவர்களுக்கு தேவையான 2 லட்சம் முக கவசமும் தயாரிக்கப்படுகிறது. சமீபத்தில் மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையால் ஓசிஎப் தொழிற்சாலை பாதிக்கப்பட்டது. தற்போது, நாட்டின் அவசியமான காலகட்டத்தில் தன்னை அர்பணித்து கொண்டது குறிப்பிடத்தக்கது என்றனர்.

Tags : factory , Decision, 30 thousand full body , Avadi OCF factory, 1100 first stage
× RELATED 97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே...