×

கொரோனா பிட்ஸ்

ராணுவம் அழைக்கப்படுமா? மத்திய உள்துறை மறுப்பு
குஜராத்தில் கொரோனா தாக்குதலுக்கு 695 பேர் ஆளாகியுள்ளனர். இதற்கு 29 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 45 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 608 பேர் சிகிச்சையில் உள்ளனர். வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. இதனால், ரோந்து பணி மற்றும் சாலைகளில் செல்லும் மக்களை சோதனையிடும் பணியில் போலீசுக்கு பதில் ராணுவத்தை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், `குஜராத் மட்டுமல்ல; எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பு பணியில் ராணுவத்தை ஈடுபடுத்தும் திட்டம் இல்லை. அந்தந்த மாநில அரசுகளே அப்பணியில் ஈடுபட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளன.

குஜராத் முதல்வர் சுயதனிமை
குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் முதல்வர் விஜய் ரூபானியை சமீபத்தில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து இம்ரானுக்கு நடத்தப்பட்ட மருத்துவசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் முதல்வருக்கும் கொரோனா தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் அவருக்கு மருத்துவர்கள் சோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என தெரியவந்தது. ஆனாலும் முதல்வர் விஜய் ரூபானி தன்னை தானே 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார். இதையொட்டி அடுத்த வாரம் முதல்வர் பங்கேற்க இருந்த  அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே ரூபானி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அலுவலக பணிகளை கவனிப்பார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உணவு கேட்டு வீடியோ அனுப்பிய தெருவோர குழந்தைகள்
கொரோனா ஊரடங்கால் தெருவோர குழந்தைகள் உணவின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக சாலை சிக்னல்களில் பலூன்கள் மற்றும் பேனா விற்கும் சிறுவர்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த 11 வயது சிறுவன் தானும் தனது சகோதர சகோதரிகள் 3 ேபர் என 4 பேர் ஊரடங்கால் உணவின்றி தவிப்பதாக வாட்ஸ் அப்பில் வீடியோ செய்தி அனுப்பியிருந்தனர். அதில் கடந்த 3 நாட்களாக எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை. குறைந்த பட்சம் குடிக்க தண்ணீராவது தாருங்கள் என அழுதபடி கோரிக்கை விடுத்திருந்தார்.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்த தொண்டு நிறுவன இயக்குனர் சஞ்சய் குப்தா அந்த குழந்தைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தார். லக்னோ, காசியாபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து இதுபோன்று உணவு போன்ற உதவி கோரி தெருவோரக்குழந்தைகள் வீடியோ அனுப்பியுள்ளனர். பலரிடம் செல்போன் இல்லாத நிலையில் செல்போன் வைத்திருந்த ஒருவரின் வாட்ஸ் அப் மூலம் இந்த வீடியோவை அந்த சிறுவன் அனுப்பியிருந்தான்.

39 லட்சம் டிக்கெட்களுக்கு ரயில்வே ரீபண்ட்
முதலில் அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த 14ம் தேதியுடன் முடிந்தது. அதன் பிறகு ஊரடங்கு நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், ரயிலில் 39 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், ஊரடங்கு நேற்று முதல் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளையும் ரயில்வே வாரியம் தானாகவே ரத்து செய்து விட்டது. இதற்குரிய முழுத் தொகையான ரூ.660 கோடியும் பயணிகளுக்கு திருப்பி செலுத்தப்பட உள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் பிடிக்கப்பட்ட வங்கி கணக்குக்கே பணம் சென்று விடும். கவுன்டர்களில் டிக்கெட் எடுத்தவர்கள், ஜூலை 31ம் தேதி வரை டிக்கெட்டை ரத்து செய்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Corona Pitts , Corona
× RELATED நாட்டின் மகள்கள் தோற்றனர்; பிரிஜ்...