×

கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பல்வேறு துறைகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து 64.26 கோடி விடுவிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.64.26 கோடியை சென்னை மாநகராட்சி, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற துறைகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நிதியை விடுவித்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் பல்வேறு துறைகளுக்கு முதற்கட்டமாக பேரிடர் நிதியில் இருந்து கடந்த ஏப்.4ம் தேதி ரூ.101 கோடி விடுவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது ரூ.64.26 கோடியை சென்னை மாநகராட்சி, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற துறைகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா நிதியை விடுவித்துள்ளார்.  அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு தலா ரூ.20 கோடியும், 5,000 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 21 நாட்களுக்கு உணவு வழங்கியதற்காக ரூ.8.34 கோடியும், காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.15.92 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை ரூ.375 கோடி நிதியைக் கேட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக ரூ.20 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், சென்னை மாநகராட்சி ரூ.280.76 கோடி நிதியைக் கோரியிருந்த நிலையில், முதற்கட்டமாக ரூ.20 கோடி மட்டும் விடுவிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசங்கள், கிருமிநாசினி, கிருமிநாசினி தெளிக்கும் நபர்கள், கூடுதல் வேலையாட்கள், ஸ்பிரேயர்கள், டிராக்டர்கள், மருத்துவர்களுக்கான வாகனங்கள், கூடுதல் கவச உடைகள், கை கழுவும் கருவிகள், லைசால், சோப், கட்டுப்பாட்டு அறை, ரோந்துப் பணிகள், ரோந்துப் பணியில் இருப்பவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் போன்ற பல்வேறு பணிகளுக்காக ரூ.64.26 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியை கொண்டு பல்வேறு துறைகள் மூலம் அவசர கால பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Tags : release ,coroner ,departures ,Corona , Corona, disaster fund, Government of Tamil Nadu
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு