×

சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆத்திரம்,.. உலக சுகாதார அமைப்பிற்கு 3,000 கோடி நிதி நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த ரூ.3,000 கோடி நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் சீனா தகவல்களை மறைப்பதாகவும், அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், கொரோனா விவகாரத்தில் தனது பணியை செய்யத் தவறிவிட்டதாக உலக சுகாதார அமைப்பை கடுமையாக கண்டித்துள்ள அதிபர் டிரம்ப், அந்த அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தி வைப்பதாகவும் நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் நோய்த்தொற்று பரவல் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்தது குறித்து விரிவான மதிப்பீடு செய்ய எனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த மதிப்பீடு விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த அனைத்து நிதியையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன். உலக சுகாதார அமைப்பு தனது அடிப்படை பணியை செய்வதில் இருந்து தோல்வி அடைந்து விட்டது.

அந்த அமைப்பிற்கு அதிகளவில் நிதி பங்களிப்பை அமெரிக்கா வழங்கி வருகிறது. ஆனால், சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கான விமான போக்குவரத்தை நாங்கள் தடை செய்த போது அதை உலக சுகாதார அமைப்பு எதிர்த்து மிக பயங்கரமான மோசமான முடிவை எடுத்தது. நல்லவேளை எனது முடிவில் உறுதியாக இருந்து பயண தடை விதிக்கப்பட்டதால், இன்று பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற நம்பகமான தகவல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கிடைத்ததும் உடனடியாக உலக சுகாதார அமைப்பு அதைப் பற்றி ஆய்வு நடத்தி இருக்க வேண்டும்.

ஆனால், அதை விட்டு ஜனவரியில் இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என தவறான தகவலை வெளியிட்டது. அதேபோல், உலக சுகாதார நெருக்கடியையும் அறிவிக்காமல் மாபெரும் தவறு இழைத்தது. சீனா அளித்த உத்தரவாதங்களை எந்த ஆய்வும் செய்யாமல் அப்படியே எடுத்துக் கொண்டு சீன அரசை உலக சுகாதார அமைப்பு ஆதரித்தது. சீனாவுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவ நிபுணர்களை அனுப்பி, அங்குள்ள நிலைமையை நன்கு ஆராய்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். அதோடு சீனாவின் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையை எடுத்துரைத்து இருந்தால், இந்த தொற்று ஆரம்பத்திலேயே குறைந்த அளவு உயிரிழப்புகளுடன் கட்டுப்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.

மேலும் உலக அளவில் பொருளாதார இழப்புகளையும் தவிர்த்திருக்கலாம். இவ்வாறு டிரம்ப் கூறினார். ஐநா.வில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளும் உலக சுகாதார அமைப்பிற்கு ஆண்டுதோறும் நிதி அளித்து வருகின்றன. இதில் முதலிடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. ஆண்டுதோறும் அந்நாடு சுமார் ரூ.3,000 கோடி முதல் 3,750 கோடி வரை வழங்கி வருகிறது. சீனா ரூ.300 கோடி மட்டுமே வழங்குகிறது. உலக அளவிலான சுகாதார பாதிப்புகள், தொற்று நோய்கள் தொடர்பாக தகவல் அளித்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை எச்சரித்து காப்பாற்றுவதே உலக சுகாதார அமைப்பின் தலையாய பணியாகும்.

‘இது சரியான நேரமல்ல’
அதிபர் டிரம்ப் முடிவு குறித்து பேசிய ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ், ‘‘கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து உலக சுகாதார அமைப்பிற்கும், பிற மனிதநேய அமைப்புகளின் செயல்பாட்டிற்குமான நிதி ஆதாரத்தை குறைக்க வேண்டிய நேரம் இதுவல்ல. இந்த வைரஸ் நம் வாழ்நாளில் முன்னெப்போதும் இல்லாத புதியதொரு சவால். இந்த சமயத்தில் உலக சுகாதார நிறுவனத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும். கொரோனா வைரசை தோற்கடிக்க உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் உதவி தேவை,’’ என்றார்.

Tags : Barack Obama ,US ,China ,President ,World Health Organization , China, World Health Organization, Financial Stopping, US President Trump
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...