×

ஐபிஎல் டி20 தொடர் காலவரையின்றி தள்ளிவைப்பு

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பட்டுள்ள நிலையில்  ஐபிஎல் டி20 தொடர் காலவரையின்றி  தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடப்பதாக இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஏப்.15ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. ஊரடங்கு முடிந்த பிறகு ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ  திட்டமிட்டிருந்தது. ரசிகர்கள் யாருமின்றி, மூடிய அரங்கில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்றும் பல்வேறு தரப்பினர் ஆலோசனை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்  கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.  இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஐபிஎல் தலைமை செயலதிகாரி ஹேமங் அமின் ஆகியோர் நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் நடத்தி ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஹேமங் அமின் நேற்று அறிவித்தார். இது தொடர்பான தகவலை 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் அவர் தெரியப்படுத்தி உள்ளார்.

ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டித் தொடர், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்குவதாக உள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் ஒத்திவைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அப்படி உலக கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டால், அந்த சமயத்தில் ஐபிஎல் தொடரை நடத்தும் வாய்ப்பு பற்றி பிசிசிஐ பரிசீலிக்கும் எனத் தெரிகிறது.



Tags : IPL T20 , IPL T20 Series, Postponement, Corona
× RELATED முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்