×

ரிசர்வ் வங்கி அறிவித்த 3 மாத சலுகை கோராவிட்டாலும் வங்கியில் இஎம்ஐ எடுக்கவில்லை: குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்

புதுடெல்லி: கடன் தவணைகளுக்கு 3 மாத சலுகையை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. ஆனால், இந்த சலுகையை கோராத வாடிக்கையாளர்கள் சிலருக்கு, வழக்கமான தேதியில் இஎம்ஐ எடுக்கப்படவில்லை. இதனால், இஎம்ஐயை ஆன்லைனில் செலுத்துவதா? பணத்தை செலுத்தாவிட்டால் என்னவாகும் என்ற குழப்பத்துக்கு வாடிக்கையாளர்கள் ஆளாகியுள்ளனர்.  சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் கொரானா தீவிரம் அடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவித்துள்ளதால் தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொழில்துறைகள், நிறுவனங்களில் பணியாற்றிய பலர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

 இதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி கடன் தவணை செலுத்த சிரமப்படுபவர்களுக்காக 3 மாத இஎம்ஐ சலுகையை அறிவித்தது. இதன்படி வங்கிகளில் வீடு, வாகன கடன்கள், தனிநபர் கடன்கள் வாங்கியவர்கள் 3 மாதத்துக்கு கட்டாவிட்டாலும் வங்கிகள் சிபிலில் புகார் செய்ய மாட்டார்கள். கடன் செலுத்த தவறியவராக நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் இந்த சலுகையை பயன்படுத்தினால், இந்த 3 மாத சலுகைக்கு ஈடாக 8 முதல் 10 மாதங்கள் அதிகமாக இஎம்ஐ செலுத்த வேண்டி வரும்.  ரிசர்வ் வங்கி இந்த சலுகையை அறிவித்த பிறகு வங்கிகள் தரப்பில் கூறுகையில், ‘இஎம்ஐ சலுகையை பயன்படுத்த விரும்புவோர் அதற்கான பிரத்யேக படிவத்தை இமெயிலில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது வங்கியில் இருந்து இந்த சலுகை குறித்து எஸ்எம்எஸ் வந்தால், அதன் மூலமாகவே தங்கள் ஒப்புதலை தெரிவிக்கலாம் என கூறியிருந்தன.

ஆனால், வட்டி அதிகம் செலுத்த வேண்டி வரும் என்பதால் வாடிக்கையாளர்கள் பலர் இந்த சலுகையை பயன்படுத்த முன்வரவில்லை. இவர்களில் பலர் வழக்கம்போல் இஎம்ஐ தொகையை வங்கி கணக்கி–்ல் இருப்பு வைத்துள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் மின்னணு முறையில் வங்கி கணக்கில் இருந்து இஎம்ஐ தவணை தானாகவே எடுக்கப்பட்டு விடும். அதற்கு முன்னதாக, கடன் தவணைக்கான இருப்பு வைத்திருக்குமாறு குறுந்தகவல் வரும். ஆனால், இஎம்ஐ தொகை இருந்தும் இந்த மாதம் வழக்கமான தவணை தேதி முடிந்த பிறகும் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படவில்லை. இதனால் வங்கிகள் தாமாகவே இந்த சலுகையை அளித்திருக்கலாம் என்று கருதி, வங்கிகளில் விளக்கம் கேட்டனர்.

 இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘வழக்கமாக வீட்டுக்கடன், வாகன கடன் போன்ற இஎம்ஐ செலுத்துவதற்கு, வாடிக்கையாளர்கள் கடன் வாங்கிய வங்கி அல்லது ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து இஎம்ஐ தொகையை அனுப்புமாறு இமெயில் வரும். இந்த முறை சில நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை வரவில்லை. இதனால்தான் பணம் கழியவில்லை. சில நிறுவனங்கள் தாமதமாகத்தான் கோரிக்கை அனுப்புகின்றன. இதுகுறித்து கடன் வாங்கிய வங்கி அல்லது பைனான்ஸ் நிறுவனத்திடம்தான் வாடிக்கையாளர்கள் கேட்க வேண்டும்’’ என்றனர்.

Tags : bank ,EMI ,RBI ,customers , Reserve Bank, Corona Virus, EMI
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...