×

குக்கரில் காய்ச்சப்படும் சாராயம் கடையும் இல்ல... காசும் இல்ல...இப்‘போதை’க்கு இதுதான் பெஸ்ட்!

தயாரிப்பு முறையை யூடியூபில் தேடும் குடிமகன்கள்

சென்னை: ஊரடங்கால் டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில், சாராயம் காய்ச்சுவது எப்படி என்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதும், அவற்றை குடிமகன்கள் தேடிபார்ப்பதும்தான் இப்போதைக்கு டிரண்டிங் ஆகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு, மீண்டும் நீட்டிக்கப்பட்டு விட்டது. தொழில்துறைகள், நிறுவனங்கள் மூடப்பட்டதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பலர் வருமானம் இழந்து வாடகை கொடுக்கவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் முடியாமல் அல்லல் படுகின்றனர். ஆனால், இதை விட பெரிய கவலை குடிமகன்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நாள் முழுக்க போதையில் மிதக்கும் இவர்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டதால் தவியாய் தவிக்கின்றனர். பிளாக்கில் வாங்கினால் ஒரு குவார்ட்டருக்கு 700 முதல் 800 அழ வேண்டியுள்ளது. அதுவும் ஒரிஜினல் சரக்கா என்பது குடிக்கும் வரை தெரிவதில்லை. ஆல்கஹால் சானிடைசரை மதுவில் கலந்து சிலர் பிளாக்கில் விற்கின்றனர். சிலர், இந்த சானிடைசரை குடித்து உயிரிழந்துள்ளனர். மதுக்கடைகள் இல்லை. பிளாக்கில் வாங்க காசும் இல்லை என்பதால் குடிமகன்கள் இருதலை கொள்ளி எறும்பு போல் செய்வதறியாமல் தவியாய் தவிக்கின்றனர். இவர்களது வயிற்றில் பால் (மது) வார்த்ததுபோல் யூடியூப்களில் சாராயம் காய்ச்சும் வீடியோக்கள் உலா வர தொடங்கி விட்டன. யூடியூபில் சாராயம் காய்ச்சுவது எப்படி எனவும், ஒயின் செய்வது எப்படி என்றும் தேடுவதுதான் இப்போது படு டிரெண்டிங் ஆகிவிட்டது.

அந்த வீடியோக்களில், பழங்களை நொதிக்க வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சி வடிப்பது எப்படி என்று விலா வாரியாக செய்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. இதுபோல், அரிசி ஒயின், வோட்கா செய்வது குறித்தும் வீடியோக்கள் பல யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்த்த குடிமகன்கள் படு குஷியாகி விட்டனர். பலர் வீட்டிலேயே முயற்சி செய்து பார்ப்பதாக, வீடியோவுக்கு கீழே கமென்ட்டில் தெரிவித்துள்ளனர். சிலர் சாராய வீடியோ பதிவேற்றம் செய்தவர்களை ‘தெய்வமே... இவ்வளவு நாளா எங்க இருந்த என் தெய்வமே’ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். யூடியூபில் சாராயம் காய்ச்சும் வீடியோவை பார்த்த குடிமகன்கள், இதற்கு தேவையான மூலப்பொருட்களான பழங்களை  வாங்கி வர தொடங்கி விட்டனர். சில பகுதிகளில் திராட்சைப்பழங்கள் விற்பனை  கனஜோராக நடப்பதாக கூறப்படுகிறது.

எப்படியோ, யூடியூபில் சாராயம், ஒயின், வோட்கா தயாரிக்கும் வீடியோக்களை தேடுவதுதான் இப்போதைக்கு படு டிரெண்டிங் ஆகிவிட்டது. இதனால், சில வீடுகளில் அடுக்களையில் உலை கொதிக்கிறதோ இல்லையோ... குக்கரில் சாராயம் கொதிக்க தொடங்கி விட்டது. ஆனாலும், பல குடிமகன்களுக்கு வருத்தம். பழத்தை நொதிக்க வைத்து காய்ச்ச குறைந்தது ஒரு வாரம் முதல் 20 நாள் வரை காத்திருக்க வேண்டுமே... அதற்குள் ஊரடங்கு முடிவுக்கு வந்து விடுமே என்பதுதான் அந்த கவலை. ஆனால், குக்கரும் கையுமாக இப்படி காய்ச்ச கிளம்பினால்... போலீஸ் வந்து அள்ளிட்டு போயிரும் அம்புட்டுதான்.

ஆன்லைனிலும் ஏமாற்றம்தான்:
பிளாக்கில் விற்கப்படும் சரக்குகள் 4 மடங்கு விலை அதிகமாக உள்ளன. சில மாநிலங்களில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை நம்பி பணம் செலுத்தியவர்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சமானது. சரக்கும் வரவில்லை.பணமும் திரும்பி வரவில்லை. இதனால் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில்ஒயின்ஷாப்களை தற்காலிகமாக திறப்பது பற்றியும் பரிசீலனை நடந்து வருகிறதாம்.


Tags : Cooker, booze, corona, curfew
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...