×

ஊரடங்கில் அதிமுகவுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்?விளம்பர மோகத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்தும் முதல்வர்

திமுகவின் மக்கள் பணியை தடுப்பதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: ஊரங்கில் அதிமுகவுக்கு மட்டுமே விதிவிலக்கு அளித்துவிட்டு, விளம்பர மோகத்திலும், தன்னை முன்னிலைப்படுத்த மட்டுமே முதல்வர் ஆட்சி நடத்துகிறார் என்று   மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு உத்தரவு, ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு மட்டுமே விதிவிலக்கு, மற்றவர்களுக்கு எல்லாம் கட்டாயம் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஒரு முதல்வர் மிகுந்த பாரபட்ச அணுகுமுறையுடன் செயல்படுவது,  ஜனநாயகத்திற்கே கேடாய் அமைந்திருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களுடன் அமர்ந்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியவர் இதே முதல்வர் தான்.

அமைச்சர்கள், அதிகாரிகள் என்று 40க்கும் மேற்பட்டவர்களை ஒரே அறையில் அமர வைத்து அமைச்சரவைக் கூட்டத்தையே முதல்வர் நடத்தியிருக்கிறார். இத்தனை கூட்டங்களையும் நடத்திய போது முதல்வருக்கு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு தெரியவில்லை.  ஆனால், திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அறிவித்ததும்,  மேற்கண்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, சென்னை மாநகரக் காவல்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்க வைத்து, அப்பட்டமான, அசிங்கமான, அநாகரீகமான  அரசியலைச் செய்திருக்கிறார் முதல்வர்  பழனிசாமி. கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றில் கூட தன்னை மட்டுமே முன்னிறுத்தி அதிமுக என்ற கட்சியை முன்னிறுத்தி, தமிழக அரசு என்ற மக்களுக்கான நடுநிலை அமைப்பை அரசியல்மயமாக்கிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 1 கோடி ரூபாயை தன்னிச்சையாக எடுத்துக் கொள்வது, திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தடுப்பது, பாதிக்கப்பட்டோருக்கு திமுக வழங்கும் உணவு மற்றும் நிவாரண உதவிகளை தடை செய்வது எல்லாமே, ஊரடங்கு நேரத்தில் திமுக ஆற்றி வரும்  பெரும் வரவேற்பைப் பெற்றுவரும், மக்கள் பணியை எப்படியாவது தடுக்கும் உள்நோக்கம் கொண்டது. சீர்கெட்ட அந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நாளைய தினம் காணொலிக் காட்சி மூலம், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். பழனிசாமி விளம்பர மோகத்திலும் - தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : AIADMK ,CM , Curfew, AIADMK, CM, MK Stalin
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...