×

ஏப்.20க்கு பிறகு ஊரடங்கு தளர்வு,..புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு: விவசாய, கட்டிட வேலைகளுக்கு அனுமதி

அரசு அலுவலகங்கள் இயங்கும்
ஐ.டி. கம்பெனிகள் திறப்பு
எலக்ட்ரீசியன், பிளம்பர், தச்சு வேலைகள் செய்யலாம்
சரக்கு போக்குவரத்து தொடக்கம்

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் வரும் 20ம் தேதி முதல் விவசாய பணிகளுக்கும், சிறு, குறு தொழில் நிறுவன கட்டுமான பணிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கான அரசு அலுவலகங்கள் இயங்கும். மேலும், எலக்ட்ரீஷியன், பிளம்பர்கள், கார்பென்டர்கள், மோட்டார் மெக்கானிக், தகவல் தொடர்பு சாதன பழுதுபார்ப்போர் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாலை, ரயில், விமான சரக்கு போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. 50 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 21 நாள் முழு ஊரடங்கு கடந்த 14ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து,  இரண்டாம் கட்டமாக மேலும் 19 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், வரும் 20ம் தேதி முதல் சில விலக்குகள் அளிக்கப்படும் என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி,  புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு விவசாயம், சிறு, குறு தொழில் நிறுவன கட்டிட பணிகள், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தொழிற்சாலைகள் இயங்கவும், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஐடி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும், எலக்ட்ரீஷியன், கார்பென்டர்கள், பிளம்பர்கள், மோட்டார் மெக்கானிக் கடைகள் இயங்கவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இதோடு, பொது போக்குவரத்துக்கு தடை, கல்வி நிறுவனங்கள் மூடல், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை, மருத்துவ சேவைகளுக்கு அனுமதி போன்ற முந்தைய வழிகாட்டு நெறிமுறைகளின் பல்வேறு அம்சங்கள் புதிய வழிகாட்டு நெறிமுறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இந்த புதிய ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறையை மாநில அரசுகள் தீவிரமாக பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது:

* கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் வரும் 20ம் தேதி முதல் செயல்படலாம்.
* வரும் 20ம் தேதி முதல் அனைத்து விதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ளலாம். கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை.
* விவசாய உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம்.
* விவசாயப் பொருள் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
* தேயிலை, காபி, ரப்பர் உற்பத்தி பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்.
* ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி வங்கிகள், ஏடிஎம்.கள் செயல்படலாம்.
* சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
* அச்சு மற்றும் எலக்ட்ரானிக் மீடியா, செய்தி டிவி சேனல்கள், டிடிஎச் கேபிள் சேவைகள் செயல்பட அனுமதி.
* கூரியர் சேவை
செயல்படலாம்.
* 100 நாள் வேலைத் திட்டம், கிராமப்புற பொது சேவை மையங்கள் ஆகியவற்றுக்கும் 20ம் தேதி முதல் அனுமதி.
* கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்.
* கிராமப்புற பகுதிகளில் சாலை, நீர்ப்பாசன திட்டங்கள், கட்டுமானம் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்துறை திட்டங்கள் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
*  மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கட்டுமானப் பணிகளை தொடரலாம். அதற்கு பணியிடத்திலேயே உள்ள தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெளி இடங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வரக் கூடாது.
* நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள், லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்கலாம்.
* சுயதொழில் செய்யும் எலக்ட்ரீஷியன், பிளம்பர்கள், கார்பென்டர்கள், மோட்டார் மெக்கானிக், தகவல் தொடர்பு சாதன பழுது பார்ப்போர் செயல்படலாம்.
* பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
* உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சரக்குகளை ஆன்லைன் மூலம் விநியோகிக்கலாம். ஆன்லைன் விநியோக நிறுவன வாகனங்கள் முறையான அனுமதி கடிதத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* அரசின் டேட்டா மற்றும் கால் சென்டர்கள் செயல்படும்.
* இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பொது இடத்தில் 5 நபர்களுக்கு கூடக் கூடாது.
* சாலை, ரயில், விமானங்கள் மூலம் அனைத்து சரக்கு போக்குவரத்தும் செயல்படும்.
* மீன் பிடி தொழில் மற்றும் மீன் விற்பனையில் ஈடுபடலாம்.
* நியாய விலைக்கடைகள், தபால் நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை இயங்கும்.இவ்வாறு புதிய வழிகாட்டுதல் நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விலக்குகள், கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதாக (ஹாட்ஸ்பாட்) அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாது.  அங்கு வழக்கமான கடுமையான நடைமுறைகளே அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு  தெரிவித்துள்ளது. 100 நாள் வேலை திட்டம், விவசாய பணிகள் போன்றவைகளுக்கு  விலக்கு அளிக்கப்பட்டாலும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,  அனைவரும் முகக் கவசம் அணிந்தே வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  

அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களுக்கு வருபவர்கள் வீட்டில்  தயாரிக்கப்படும் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவும் கடுமையாக பின்பற்றப்பட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மளிகை, காய்கறி, பழங்கள் மற்றும் பால், இறைச்சி, மீன் கடைகள் தற்போது உள்ளபடி வழக்கம் போல் செயல்படலாம். வரும் 3ம் தேதி வரை கல்வி  நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள்  தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அனைத்து விதமான சமூக, அரசியல்  நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிக்கும். மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து  மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக பின்பற்ற உத்தரவு:
‘மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் எந்த வித மாற்றத்தையும், தளர்வுகளையும் மாநில அரசுகள் செய்யக் கூடாது. ஊரடங்கை அனைத்து மாநிலங்களும் எந்தவித சமரசமுமின்றி கடுமையாக பின்பற்ற வேண்டும்,’ என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவுகள் மீறப்பட்டாலோ அல்லது வைரஸ் பரவல் அச்சம் ஏற்பட்டாலோ புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையான பின்பற்ற வேண்டும் என்றும் அஜய் பல்லா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எது செயல்படும்?
* விவசாய பணிகள்
* தொழிற்சாலைகள்
* சரக்கு போக்குவரத்து
* அரசு கால்சென்டர்
* 100 நாள் வேலை பணிகள்
* வங்கி, ஏடிஎம்கள்
* அத்தியாவசிய கடைகள்
* பெட்ரோல் பங்க்
* எலக்ட்ரீஷியன்
* பிளம்பர்
* கார்பென்டர்
* நியாய விலைக்கடைகள்
* தபால் நிலையங்கள்
* கூரியர்
* ஐடி நிறுவனங்கள்
*  எது செயல்படாது?
* பொது போக்குவரத்து
* கல்வி நிறுவனங்கள்
* மதுக்கடைகள்
* திரையரங்குகள்
* ஷாப்பிங் மால்கள்
* மத வழிபாட்டு தலங்கள்

எச்சில் துப்புவது குற்றம்:
மத்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பொது இடத்தில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாக மத்திய அரசு தனது புதிய வழிகாட்டு நெறிமுறையில் கடுமையாக்கி உள்ளது. இதன்படி, பொது இடத்தில் எச்சில் துப்பினால் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். வட மாநிலங்களில் புகையிலை பொருட்களை சுவைப்போர் பொது இடத்தில் எச்சில் துப்பும் பழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. எச்சில் நீர்த்துளிகள் மூலமாகவே கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகள் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுத்துள்ளன. தற்போது மத்திய அரசும் இதை கடுமையாக்கி உள்ளது.

இதேபோல், மது விற்பனைக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறையில் எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. மார்ச் 23 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஊரடங்கு 2.0விலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : building , Curfew relaxation, protocol release, corona, agriculture, building jobs
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...