×

பண்ருட்டியில் நள்ளிரவில் பயங்கரம்,..அதிமுக எம்எல்ஏ ஆதரவாளர்கள் 2 பேர் சரமாரி வெட்டிக் கொலை

அமைச்சருக்கு வேண்டியவர்கள் மீது புகார்

பண்ருட்டி: பண்ருட்டியில், அதிமுக எம்.எல்.ஏ. சத்யாவின் ஆதரவாளர்கள் 2 பேர் நள்ளிரவில் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26). மர சிற்பி. இவரது நண்பர் பாலாஜி (22). சாமி சிலைகள் செய்யும் சிற்ப கலைஞர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 2 பேரும் மணிகண்டன் நிலத்தில் பருத்தி, வாழைக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது, 10க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் அங்கு வந்து 2 பேரையும் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் இருவரும் அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பாலாஜி இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். படுகொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களையும் பண்ருட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

கொலையான இருவரும் அதிமுக எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆவர். இந்த பகுதியில் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பும் இரண்டு தரப்பினரும் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என அதிமுக நிர்வாகிகள் கூறினர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முட்டல், மோதலை சமாதானம் செய்யவில்லை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே அமைச்சர் எம்.சி. சம்பத் ஆதரவாளர்களுக்கும், எம்.எல்.ஏ. சத்யா ஆதரவாளர்களுக்கும் ெதாடர்ச்சியாக மோதல் இருந்து வருகிறது. ஆனால், அவர்களை இருவருமே அழைத்து பேசி சமரசம் செய்யவில்லை. இதனால், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சி என்றாலும் இரு தரப்பு தொண்டர்களுக்கும் இடையே முட்டல், மோதல் நடக்கும். அப்போது பணியில் இருக்கும் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்படும். தற்போது, கொரோனா பயத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற வாலிபர்களை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : supporters ,AIADMK ,MLA ,Panruti , Panruti, AIADMK MLA supporters, murdered
× RELATED தீபாவளி பண்டிகை ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்கள், புத்தாடை