×

தடை உத்தரவால் ஆந்திர வத்தல் வரத்து குறைந்தது; குளத்தூர் குண்டுமிளகாய் வத்தலுக்கு கடும் கிராக்கி: விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை

குளத்தூர்: ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக ஆந்திராவில் இருந்து மிளகாய் வத்தல் வரத்து குறைந்ததால் குளத்தூர் பகுதி குண்டு மிளகாய் வத்தலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதிக விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளான பனையூர், கெச்சிலாபுரம், வைப்பார், புளியங்குளம், வீரபாண்டியபுரம், த.சுப்பையாபுரம், முத்துக்குமாரபுரம், வேடநத்தம், வெங்கடாசலபுரம், வள்ளிநாயகபுரம், கொல்லம்பரம்பு வேப்பலோடை பகுதிகளில் பருவமழை காலங்களில் கம்பு, சோளம், மிளகாய், உளுந்து, மற்றும் ஊடுபயிராக வெங்காயம், பாகற்காய், தக்காளி விதைத்தும், நட்டு வைத்தும் விவசாயப் பணிகளை மேற்கொள்வர். தற்போது அனைத்து பயிர்களும் அறுவடை முடிந்து மிளகாயை பறித்து வத்தலாக காயவைத்து பதப்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மிளகாய் வத்தலுக்கு விலை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் இந்த ஆண்டு உளுந்து அதிகமாக விதைத்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் ஆந்திர மாநில வத்தல் வரத்து தமிழகத்திற்கு குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்திற்கு விற்ற ஒரு குவிண்டால் வத்தல், தற்போது அதிகரித்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை விலை போகிறது. ஆனால், மிளகாய் வத்தல் கடந்த ஆண்டை விட விளைச்சல் குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மிளகாய் வத்தல் மொத்த வியாபாரி கெங்குமணி கூறுகையில், ‘விளாத்திகுளம் மற்றும் குளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் அதிகமாக குண்டுமிளகாய் விவசாயமே மேற்கொள்வர்.

ஆனால் கடந்தாண்டு மிளகாய் வத்தலுக்கு விலை இல்லாமல் போனதால் இந்தாண்டு பெரும்பாலான விவசாயிகள் உளுந்து அதிகம் விதைத்தனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெளிமாநில வத்தல்கள் தமிழகத்துக்கு வருவது குறைந்து போனது. இதனால் இங்குள்ள வத்தலுக்கு தற்போது மவுசு ஏற்பட்டு விலையும் அதிகரித்து உள்ளது. ஆனால் குறைந்தளவே பயிர் செய்தது மற்றும் மிளகாய் விளைச்சல் இல்லாமல் போனதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்’ என்றார்.

Tags : Andhra Pradesh ,plantation ,Claytur Kundumkillai ,Kulathur Kundumkilai , Klathoor, Kundu Pillai, farmers, concern
× RELATED ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை...