குழித்துறை நகராட்சியில் அதிரடி; பொதுமக்களுக்கு 3 நிறங்களில் அடையாள அட்டை: வெளியே வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை

மார்த்தாண்டம்: கொரோனா வைரஸின் சமூக பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த 21 நாட்கள் ஊரடங்கு தற்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் தேவையின்றி வெளியே சுற்றித்திரிகின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் குழித்துறை நகராட்சி பகுதியில் தேவையின்றி சுற்றித்திரிவதை தடுக்கும் பொருட்டு, 21 வார்டுகளிலும் உள்ள  பொதுமக்களுக்கு 3 நிறங்களில் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அனைத்து பொதுமக்களுக்கும் இந்த கார்டுகள் இன்று வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ஆணையாளர் மூர்த்தி தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், மேலாளர் ஜெயன் உட்பட நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். குழித்துறை நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த கார்டை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை வெளியே வரலாம். இதில் சிவப்பு நிற கார்டுகள் வைத்திருப்பவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், மஞ்சள் நிற கார்டுகள் வைத்திருப்பவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும்,

இளம்நீல நிற கார்டுகள் வைத்திருப்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம். ஒரு வீட்டில் ஒரு கார்டை பயன்படுத்தி ஒருவர் மட்டுமே வெளியே வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் வெளியே வரக்கூடாது. ஆனால் அவசர மருத்துவ தேவைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்தி வெளியே வரலாம். அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் இருச்சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அட்டையுடன் வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். இதுபோல குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும், 3ம் கட்டமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு 125 கவச உடைகள் வழங்கப்பட்டன. அவற்றை தூய்மை பணியாளர்கள் இன்று முதல் அணிந்து பணிபுரிகின்றனர். குழித்துறை நகராட்சியில் 49 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>