×

வேளாங்கண்ணியில் கல் குவாரியை மூடியதால் 312 கி.மீ தூரம் நடந்து பாதை மாறி பழநிக்கு வந்த கூலித்தொழிலாளர்கள்: திருவண்ணாமலைக்கு செல்ல முடியாமல் தவிப்பு

பழநி: வேளாங்கண்ணியில் கல்குவாரியை மூடியதால் வேலையிழந்த திருவண்ணாமலை கூலித்தொழிலாளர்கள், 312 கி.மீ தூரம் நடந்து பாதை மாறி பழநிக்கு வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்கறி, மளிகை மற்றும் மருந்துக்கடைகள் தவிர மற்ற வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் கல்குவாரியில் பணிபுரிந்து வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 6 பேர் வேலை இல்லாததால், 3 வயது குழந்தையுடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவு எடுத்தனர். வாகன போக்குவரத்து இல்லாததால் கடந்த 8 நாட்களாக நடந்தும், வழித்தட வாகனங்களில் ஏறியும் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருச்சி வந்தனர். பின், அங்கிருந்து திருவண்ணாமலை செல்வதற்கு பதிலாக வழிமாறி திண்டுக்கல் வழியாக பழநி வந்துவிட்டனர். சுமார் 312 கி.மீ தூரம் குழந்தையுடன் கூட்டமாக நடந்தே வந்த கூலித்தொழிலாளர்களை, பழநி அரசு மருத்துவமனை அருகே, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-கலெக்டர் உமா தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று நிறுத்தி விசாரணை நடத்தினர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

இதில், அவர்கள் பாதை மாறி பழநிக்கு வந்தது தெரிய வந்தது. உணவு கிடைக்காமல் பரிதவிப்பதும் தெரிந்தது. இதனைத்தொடர்ந்து அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை கொடுத்தனர். பழநியில் இருந்து தங்களது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு நடந்தே செல்வதாக கூறி கூலித்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். பழநியில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல 300 கி.மீ தூரம் என்பதால் சில தன்னார்வ அமைப்பினர், இவர்களை தங்களது சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து, ஊருக்கு கொண்டு அனுப்ப தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Wage laborers ,Velankanni ,quarry ,closing ,Habitat ,Thiruvannamalai , closure,stone, Velankanni, Habitat Mercenaries, Thiruvannamalai
× RELATED பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனம்