×

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி மூணாறு எல்லைப்பகுதி ட்ரோன் மூலம் கண்காணிப்பு

மூணாறு: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக, தமிழகத்தை ஒட்டியுள்ள மூணாறு எல்லைப்பகுதியில் கேரள போலீசார், ட்ரோன் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், இந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள், தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகைச்சாமான்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, தேனி மாவட்டத்துக்கு அதிகமாக சென்று வருகின்றனர். மேலும், தேனியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் 41 பேரில், 15 பேர் போடியைச் சேர்ந்தவர்கள்.மூணாறு எல்லைப்பகுதியான சின்னக்கானல், சந்தன்பாறை, உடும்பன்சோலை ஆகிய கிராம பஞ்சாயத்துகள், போடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளன. இந்நிலையில், தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மூணாறு எல்லைப்பகுதி பஞ்சாயத்துகளில் 22 வார்டுகளுக்கு இடுக்கி கலெக்டர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சந்தன்பாறை பகுதியில் உள்ள பண்ணியார், பொத்தடி, சேரியார் ஆகிய வார்டுகள், சின்னக்கானல் பகுதியில் உள்ள நாகமலை, உடம்பஞ்சோலை, மன்னதோடு, பாம்புப்பாறை, நெடுங்கண்டத்தில் உள்ள 8,9,11 ஆகிய வார்டுகள், கருணாபுரம் பகுதியில் 4,7,10,11 வார்டுகள், வண்டன்மேடு பகுதியில் 7,10 வார்டுகள், சக்குப்பள்ளம் பகுதியில் 8,11 வார்டுகள், குமுளி பகுதியில் 6,7,8,9,12 ஆகிய வார்டுகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மலைப்பாதை வழியாக தமிழகத்தில் உள்ள தேனி, போடி, கொடைக்கானல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மூணாறு அருகே உள்ள சந்தன்பாறையில் ராஜபாறை மேட்டு, சதுரங்கப்பாறை மெட்டு, தண்டர் மெட்டு போன்ற பகுதிகளில் ட்ரோன் மூலம் 24 மணி நேரமும் கேரள போலீசார் கண்காணித்து வருகின்றனர். தேனி, போடியில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் அனைத்துக்கும் போடிமெட்டில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபிறகே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.




Tags : district tracking ,Theni District Coronavirus ,Theni , Coronavirus, Theni , Tracking,drone
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...