×

கோவையில் பம்புசெட், உதிரிபாகம் உற்பத்தி நிறுத்தம் ரூ.800 கோடி வரை இழப்பு 3 லட்சம் தொழிலாளர் பாதிப்பு

* கடனுக்கு 6 மாதம் அவகாசம் தராவிட்டால் தற்கொலை
* தொழில்துறையினர் எச்சரிக்கை
கோவை: ஊரடங்கால் கோவை மாவட்டத்தில் பம்பு செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் உற்பத்தி பாதித்துள்ளது. இதனால் இதுவரை ரூ.800 கோடி வரை இழப்பு ஏற்பட்டு, தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளது. எனவே ஜி.எஸ்.டி., வங்கி கடன், மின்சார கட்டணம் போன்றவைகளை செலுத்த அரசு 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், பஞ்சாலைகள், சிறு,குறு தொழில் நிறுவனங்கள், கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், பைப் தயாரிக்கும் நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரம் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 3 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் பொருளாதாரம் பாதிக்கும் என்ற போதிலும் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை ஏற்று கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: கோவை மாவட்டத்தில்  75 ஆண்டுகளுக்கும் மேலாக பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலை பொறுத்தவரையில் கோடை காலம்தான் எங்கள் நம்பிக்கை. தற்போது ஆர்டர்கள் வரும் நேரம். ஆனால் கொரோனாவால் உலகமே தனது பொருளாதாரத்தை இழந்து தவிக்கிறது.
பம்புசெட் தொழிலில் மட்டும் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி என்ற அடிப்படையில் ரூ.800 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பில் இருந்து தொழில்துறையினரை காப்பாற்ற ஜி.எஸ்.டி., வங்கி கடன், மின்சார கட்டணம் போன்றவைகளை செலுத்த 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உதவவில்லை என்றால் தொழில்துறையினர் இடையே தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kovil , Bombshell, spare parts, Kovil loss , Rs 800 crore
× RELATED பாஜவுடன் நள்ளிரவு கூட்டணியும், கள்ளக்...