×

கொரோனாவை ஒழிக்க போராட்டம்: காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும்: சோனியா உறுதி

புதுடெல்லி: `‘கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும்’’ என்று சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விதிக்கப்பட்டிருந்த 21 நாள் ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மே 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்ைப அவர் வெளியிடுவதற்கு சற்று முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ செய்தி ஒன்றை கட்சி வெளியிட்டது. அதில் சோனியா கூறியிருப்பதாவது:  கொரோனா பரவுவதை தடுக்க நாட்டு மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அனைவரது ஆதரவு இல்லாவிட்டால் கொரோனாவுக்கு எதிரான போரை வெல்வது கடினம். ஊரடங்கின்போது வீட்டில் தங்கியிருந்து அமைதி காத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாடே கொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதை ஒழிக்க போராடும் போர் வீரர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து உதவ வேண்டும். மத்திய அல்லது மாநில அளவில் காங்கிரசின் ஆதரவை கோரினால் அவர்களுக்கு கட்சி தொண்டர்கள் உதவவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் இதுபோன்ற போராட்டத்தின்போது மக்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக செயல்படும். கொரோனாவில் இருந்து நாடு விரைவில் விடுதலை பெறும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். எனவே நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றும் தேசபக்திக்கு குறைந்ததல்ல. எனவே உங்கள் உதவி மற்றும் ஆதரவு இன்றி இந்த வைரசுக்கு எதிராக போராட முடியாது.
 கொரோனாவை ஒழிக்க போராடும் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. கொரோனாவுக்கு எதிராக டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீஸ்காரர்கள், அரசு அதிகாரிகள் என பலர் இரவு பகலாக கடுமையாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும் அவர்களது சேவை தொடர்கிறது.

உங்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லாவிட்டால் இந்த போராட்டம் வலிமை இழந்துவிடும். சில இடங்களில் டாக்டர்களிடம் சிலர் முறைகேடாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. இதை நாம் அனுமதிக்க கூடாது. தனிநபர்கள் சிலர் இந்த நேரத்தில் ஏழைகளுக்கு உணவு, சானிடைசர் போன்ற உதவிகளை வழங்கி வருவதை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.

பாஜ தலைவர் நன்றி
`நாடு கொரோனா பிரச்னையில் சிக்கி தவிக்கும்போது மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதை அரசியலாக்கி வருகிறார்’ என பாஜ தலைவர் நட்டா முன்னதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்களுடன் இணைந்து போரிடுவார்கள் என்று வீடியோவில் செய்தி வெளியிட்டிருந்த சோனியாவை நட்டா டிவிட்டர் பதிவில் பாராட்டியுள்ளார். அதில், `‘நன்றி சோனியாஜி. உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்’’ என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பாஜ வட்டாரங்கள் கூறுகையில், `‘பிரதமர் உரையாற்றுவதற்கு முன்னதாக வீடியோ செய்தி வெளியிடுவதை சோனியா காந்தி தவிர்க்க வேண்டும்’’ என்று ேகட்டுக் கொண்டுள்ளன.

Tags : Congress ,Corona ,Sonia , Corona, Struggle, Congress, Sonia Gandhi
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...