×

திருப்பதியிலும் மே 3 வரை பக்தர்கள் அனுமதி நிறுத்தம்: தேவஸ்தானம் தகவல்

திருமலை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலியால் மே 3ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் ஊரடங்கு இருக்கும் வரை பக்தர்கள் அனுமதிக்க முடியாது என்று தேவஸ்தானம் அறிவித்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே 3ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படுவதாகவும், தொடர்ந்து சுவாமிக்கு நடைபெறக்கூடிய நித்திய பூஜைகள் அனைத்தும் வழக்கம்போல் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று செய்ய உள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கோயில் முன் கிருமிநாசினி பாதை மூலிகை கரைசல் தெளிக்கப்படுகிறது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சார்பில் கோயிலுக்கு வெளியே துளசி, கற்றாழை உள்ளிட்ட மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கிருமிநாசினி சுரங்கப்பாதை நேற்று சோதனை முறையில் அமைக்கப்பட்டது. சுகாதார அலுவலர் ஆர்.ஆர்.ரெட்டி தலைமையில் இந்த கிருமிநாசினி சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வைக்கப்பட்ட இயற்கை முறையிலான கிருமிநாசினியால் ரசாயனத்தால் ஏற்படக்கூடிய கண்ணெரிச்சல், உடல் உபாதைகள் போன்றவை இல்லாமல் கொரோனா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்கும்.

இதில் 250 லிட்டர் இயற்கை ரசாயனம் உள்ள நிலையில் சென்சார் முறையில் அமைக்கப்பட்ட சுரங்க பாதையில் ஊழியர்கள் உள்ளே செல்லும்போது இயற்கை கிருமிநாசினி தெளிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை பொறுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அலிபிரி, வாரிமெட்டு, அன்னபிரசாத கூடம், வைகுண்டம் காத்திருப்பு அறை, கல்யாண கட்டா, ஏழுமலையான் கோயில் மகா துவாரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இதனை வைக்க ஆலோசித்து வருவதாக சுகாதார அலுவலர் ஆர்.ஆர்.ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags : pilgrims ,Tirupati , Tirupati, Devasthanam, Corona
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது