×

கொரோனா பாதித்து பலியான ஆந்திர டாக்டர் உடல் தகனம்: உறவினர்கள் யாரும் வரவில்லை

சென்னை,: கொரோனாவால் பலியான ஆந்திர டாக்டரின் உடல் போரூர் மின்மயானத்தில் நேற்று எரியூட்டப்பட்டது. ஆந்திராவில் இருந்து மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என யாரும் வரவில்லை. ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 60 வயது டாக்டர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் கடந்த 4ம் தேதி சென்னை வந்தார். பின்னர், வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் டாக்டரின் உறவினர்ளுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தது. டாக்டர் உடலை சென்னையிலேயே தகனம் செய்துவிடுமாறு உறவினர்கள் தெரிவித்தனர். இதற்காக இணையதளம் வாயிலாகவும் ஒப்புதல் அளித்ததாகவும் தெரிகிறது.

பின்னர், டாக்டரின் உடலை தகனம் செய்ய அம்பத்தூரில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர். கொரோனா பாதித்த டாக்டரின் உடலை எரித்தால் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையிலும் பொதுமக்கள் உடன்படவில்லை. இதனால் டாக்டரின் சடலத்தை எரியூட்டாமல் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசென்று பிணவறையில் வைத்தனர்.

 இந்தநிலையில், நேற்று டாக்டரின் உடலை மருத்துமனை நிர்வாகத்தினர் போலீசார் பாதுகாப்புடன் போரூர் மாநகராட்சி மின்மயானத்தில் எரித்தனர். மேலும், மருத்துவரின் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவருக்கும் சிகிச்சை அளித்த டாக்டரின் உடல் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என ஒருவர் கூட உடன் இல்லாமல்  எரியூட்டப்பட்டது பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது.


Tags : doctor ,relatives ,Dr. ,nobody ,Corona ,AP , Corona, Kill, AP Doctor, Body cremation
× RELATED பூசணி விதையின் பயன்கள்!