×

பீமா-கோரேகாவ் கலவரம் தொடர்பான எல்கார் பரிஷத் வழக்கில் அம்பேத்கரின் உறவினர் ஆனந்த் தெல்தும்ப்டே கைது

மும்பை,: பீமா-அம்பேத்கரின் நெருங்கிய உறவினர் ஆனந்த் தெல்தும்ப்டே உட்பட இரண்டு பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) நேற்று கைது செய்தது.
புனே மாவட்டத்தில் உள்ள பீமா-கோரேகா என்ற இடத்தில் கடந்த 1818ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டீஷ் படைக்கும் பேஷ்வாக்கள் படைக்கும் நடந்த போரில் பிரிட்டீஷ் படை வெற்றி பெற்றது. பிரிட்டீஷ் படையில் தலித்கள் பெரும்பான்மையாக இருந்ததால், இந்த போர் வெற்றியை தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது வெற்றியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த 2018, ஜனவரி 1ம் தேதியன்று பீமா-கோரேகாவில் உள்ள போர் வெற்றி நினைவுச் சின்னத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த போது பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன.

இந்த கலவரம் தொடர்பாக புனே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பீமா-கோரேகாவில் கலவரம் நடப்பதற்கு முதல் நாளன்று அதே இடத்தில் எல்கார் பரிஷத் என்ற இடதுசாரி இயக்கத்தினரின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியதாக புனே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக இடதுசாரி மற்றும் அம்பேத்கர் சிந்தனையாளர்களும் சமூக ஆர்வலர்களுமான ஆனந்த் தெல்தும்ப்டே, கவுதம் நவ்லாகா ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, இந்த வழக்கில் தெலுங்கு கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட  இடதுசாரி சிந்தனையாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.

ஆனால், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த ஆனந்த் தெல்தும்ப்டே, கவுதம் நவலாகா ஆகியோர் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று ஆனந்த் தெல்தும்ப்டே மற்றும் கவுதம் நவ்லாகா ஆகியோர் தென் மும்பை, கம்பாலா ஹில் பகுதியில் உள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி அலுவலகத்துக்கு தனித்தனியாக சென்று சரணடைந்தனர். அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆனந்த் தெல்தும்ப்டே பாபாசாகேப் அம்பேத்கரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆனந்த் தெல்தும்ப்டேயின் மனைவி ரமா, அம்பேத்கரின் கொள்ளுப்பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.  அம்பேத்கரின் 129வது பிறந்த நாளன்று அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்த் தெல்தும்ப்டே கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Anand Thelthumbde ,Ambedkar ,riots ,Bhima-Goregaon ,Elgar Parishad ,Anand Deltumbde , Bhima, Goregaon, Elgar Parishad case, Ambedkar, Anand Teltumbde arrested
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா