×

சமூக இடைவெளியை பின்பற்றாமல் மீன் வாங்க வைகை அணையில் குவிந்த மக்கள்: ஆண்டிபட்டியில் பரபரப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வைகை அணையின் நீர்தேக்க பகுதியில் நேற்று நடந்த மீன் விற்பனையில், ஏராளமானோர் திடீரென ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த வைகை அணையின் நீர்தேக்க பகுதியில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வைகை அணையில் மீன்பிடி தொழில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டது.

இதனால் கடந்த ஆண்டு கோடை வெப்பம் காரணமாக வைகை அணை தண்ணீர் சூடாகி மீன்கள் செத்து மிதந்ததை போல இந்த ஆண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, கடும் கட்டுபாடுகளுடன் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் மீன்பிடி நடைபெற்றது. மேலும் மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் அணை நீர்தேக்கப்பபகுதியில் தடுப்பு கம்புகள் அமைத்து வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், மீன்கள் வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகள் அறிவுறுத்தியும் சமூக இடைவெளியை மக்கள் யாரும் பின்பற்றவில்லை. கூட்டமாக கூடியாதால் அங்கு நோய் பரவும் அச்சம் அதிகரித்தது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கூட்டமாக நின்றிருந்தவர்களை விரட்டினர். பிடிக்கப்பட்ட மீன்களை சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.  



Tags : Vaigai Dam , Social space, Vaigai Dam, people, antipathy
× RELATED மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில்...