×

தேன்கனிக்கோட்டை அருகே கால் முறிந்து அவதிப்பட்ட யானை சாவு: பிரேத பரிசோதனைக்கு பின் புதைப்பு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, கால் முறிந்து அவதிப்பட்டு வந்த யானை, கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள துடுக்கனஹள்ளி அடுத்த திம்மராயனஹள்ளி கிராமத்தில், மாரியப்பன் என்பவரது மாந்தோப்பில் கடந்த வாரம் கால் முறிந்த நிலையில் ஆண் யானை, அவதிப்பட்டு வந்தது. இது குறித்த தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜி உத்தரவின் பேரில், அங்கு சென்ற கால்நடை மருத்துவர்கள் யானைக்கு வலி நிவாரண ஊசிகளை செலுத்தி உணவு, தண்ணீர் வழங்கினர். தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக கிரேன் மூலம் யானையை லாரியில் ஏற்றி, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் கோவைபள்ளம் என்ற இடத்திற்கு கடந்த 4ம்தேதி கொண்டு வந்தனர்.

 அங்கு வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், யானைக்கு உணவு, பழங்கள் மூலம் மருந்து, மாத்திரைகளை கொடுத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்ட யானை, படுத்த படுக்கையாக இருந்தது. இதனால், உடல்நிலை மோசமாகி, நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் யானையை பிரேத பரிசோதனை செய்து, பொக்லைன் மூலம் குழி தோண்டி அதே பகுதியிலேயே புதைத்தனர்.

Tags : autopsy ,Denkanikottai ,burial , Elephant ,dies ,breaking, leg ,Denkanikottai,
× RELATED வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க...