×

‘குட்டி திருப்பூர்’ புதியம்புத்தூரில் முக கவசங்கள் தயாரிப்பு பணி தீவிரம்: தையல் தொழிலாளர்கள் வாழ்வில் வசந்தம்

ஓட்டப்பிடாரம்:   கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் முக கவசங்கள், பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றம் சுகாதார பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆயத்த ஆடைகள் வடிவமைப்பு தொழிலில் திருப்பூருக்கு அடுத்தபடியாக சிறப்பு பெற்று விளங்கும்  தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியில் தற்போது முககவசங்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள நான் ஓவன் பேப்ரிக் என்ற ஒருவகை துணியிலிருந்து முககவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து ஒரு அடுக்கு, இரண்டு மற்றும் மூன்று அடுக்கு என பல்வேறு மாடல்களில் வெட்டப்பட்டு முககவசங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் முககவசங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை வடிவமைப்பு தொழில் நடத்தி வந்த நிலையில், தற்போது முக கவசங்களை தயாரித்து மொத்தமாக பல்வேறு இடங்களுக்கு அனுப்பிவரும் ராஜ்குமார் என்பவர் கூறுகையில், ஆயத்த ஆடை தொழில் முடங்கிய நிலையில் தற்போதைய தேவை கருதி முககவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

எங்களிடம் வேலை செய்யும் நபருக்கு இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு முககவசம் ஒன்றுக்கு கூலியாக ரூ.2 மற்றும் ரூ.2.50 எனவும் துணிகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு தயாரித்து வழங்கும் நபர்களுக்கு ரூ.2.50 எனவும் வழங்கி வருகிறோம்.நாட்டின் அவசரகால தேவை என்ற அடிப்படையில் அரசின் அனுமதி பெற்று முககவசங்களை தயாரித்து சென்னை விழுப்புரம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் திருவனந்தபுரத்துக்கும் மொத்தமாக அனுப்பி வருகிறோம்.
 தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு 2 லட்சத்திற்கும் மேலான முககவசங்களை தயாரித்து வழங்கி உள்ளோம். முககவசங்கள் அதிகமான எண்ணிக்கையில் தேவைப்படுவதால் புதியம்புத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தையல் தொழிலாளர்களிடம் அதற்கான துணிகளை மொத்தமாக கொடுத்தும் தைத்து வாங்குகிறோம்.முககவசங்களை மொத்தமாக வாங்க வரும் நபர்களிடம் ஒன்றுக்கு ரூ.8 என நாங்கள் நிர்ணயித்துள்ள விலையை சொல்லும்போது அதைவிட குறைவாக தருமாறு கூறுகின்றனர். தற்போதுள்ள சூழலில் இதுபோன்று பலரும் முக கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அரசும் மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்’ என்றார்.



Tags : Kutty Tirupur ,Puthupputhur Facial , Facial, production, work , puthupur
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...