×

தாய் இறந்த செய்தியை கேட்டு காடு, மலை, ஆற்றை கடந்து 3 நாளில் 1,100 கிமீ பயணித்து வந்த பாசமகன்

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தாய் இறந்த செய்தியை கேட்டு துடித்துப் போன பாசமகன் காடு, மலை, ஆற்றை தாண்டி சரக்கு ரயில், மருந்து வாகனங்கள் என மாறி மாறி 3 நாளில் 1100 கிமீ பயணித்து சொந்த ஊரை அடைந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டீஸ்கரில் நக்சல் பாதிப்புள்ள பிஜாபூர் மாவட்டத்தில் பணியாற்றி வருபவர் சட்டீஸ்கர் ஆயுதப்படையை சேர்ந்த 30 வயதான சந்தோஷ் யாதவ். உபி மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர். கடந்த 5ம் தேதி சந்தோஷ் யாதவ்வின் தாயார் வயது முதிர்வால் வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இத்தகவலை அவரது தந்தை போனில் தெரிவித்துள்ளார். சந்தோஷின் தம்பி, தங்கை இருவரும் மும்பையில் வசிப்பதால் அவர்களால் ஊர் திரும்புவது முடியாத காரியம்.

இக்கட்டான நேரத்தில் தனது தந்தையை மட்டும் தனியாக தவிக்க விட விரும்பாத சந்தோஷ், எப்படியும் சொந்த ஊர் திரும்புவதென முடிவு செய்தார். உயர் அதிகாரிகள் ஒப்புதலுடன் 7ம் தேதி காலை புறப்பட்ட அவர் பிஜாபூரில் இருந்து அரிசி மூட்டை ஏற்றி வந்த லாரி மூலம் ஜக்தல்பூர் பகுதியை வந்தடைந்தார். அங்கு 2 மணி நேரம் காத்திருந்த பிறகு மினி லாரி கிடைத்து லிப்ட் கேட்டு கோண்டகன் வந்தடைந்தார். இப்பகுதி ராய்பூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. அப்போது அங்கிருந்து போலீசார் சந்தோஷிடம் விசாரிக்க நிலைமையை விவரித்துள்ளார். அதைக் கேட்ட போலீசார் மருந்து வாகனம் ஒன்றில் ஏற்றி ராய்ப்பூருக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரயில்வேயில் பணியாற்றும் தனது சக கிராமத்தினர் உதவியுடன் ராய்ப்பூரில் இருந்து  8 சரக்கு ரயில்களில் மாறி மாறி பயணித்துள்ளார்.

இறுதியில் கடந்த 10ம் தேதி சொந்த கிராமத்திற்கு அருகில் உள்ள ரயில் நிலையத்தை அடைந்துள்ளார். அங்கிருந்து 5 கிமீ நடந்து படகு மூலமாக கங்கை ஆற்றை கடந்து ஒருவழியாக வீடு வந்தடைந்துள்ளார். 3 நாளில் பல தடைகளை தாண்டி 1100 கிமீ பயணித்து தனது தாய்க்கு மகனாக செய்ய வேண்டிய இறுதி கடமைகளை நிறைவேற்றி உள்ளார். ஊரடங்கு காரணமாக தன்னை பல இடங்களில் போலீசார் நிறுத்தியதாகவும், மனிதானமான அடிப்படையில் தனது பயணத்தை தொடர அவர்கள் அனுமதி வழங்கியதாகவும் சந்தோஷ் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Tags : river ,forest ,mountain ,death , Maternal death, son of affection, curfew
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...